
ஜம்மு,
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது.
இதைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியது. அந்த வகையில் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மீது பாகிஸ்தான் நேற்று திடீர் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இதனால், இரு தரப்புக்கும் இடையே கிட்டத்தட்ட போர் உருவாகி உள்ளது.
இந்தியாவின் தாக்குதலைதொடர்ந்து பாகிஸ்தான் மிகவும் பதட்டமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதன்படி நேற்று இரவு தொடங்கி, இன்று அதிகாலை வரையிலான இரவில், பாகிஸ்தான் மீண்டும் எல்லையைத் தாண்டி ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டது, இதற்கு இந்திய ராணுவம் கடுமையான பதிலடி கொடுத்தது.
எல்லையில் பாகிஸ்தானின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் இந்தியா தீர்க்கமாக பதிலடி கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானால் தொடங்கப்பட்ட அனைத்து டிரோன் தாக்குதல்களையும் இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகள் திறம்பட முறியடித்தன.
சம்பாவில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள்
இந்நிலையில் ஜம்முவின் சம்பா மாவட்டத்தில், சர்வதேச எல்லையில் ஒரு பெரிய ஊடுருவல் முயற்சியை எல்லைப் பாதுகாப்புப் படையினர் (BSF) முறியடித்துள்ளனர். இதன்படி சம்பா பகுதியில் ஊடுருவல் முயற்சியை முறியடித்தபோது ஏழு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் கொன்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 10-12 பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றநிலையில், பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். மீதமுள்ள பயங்கரவாதிகள் பாகிஸ்தானை நோக்கி ஓடி சென்று தப்பினர். இந்த பயங்கரவாதிகள் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.