எல்லாம் தந்து ஆனந்தமாய் அருளும் அன்னை – அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம்

2 days ago 5


“அறிவிழந்து’’மனத்தினால் பதியப்பட்டுள்ள எண்ணங்களின் அடிப்படையில் அறிவு தோன்று கிறது. அது புறச்சூழல் சார்ந்த உடலை இயக்கி அனுபவத்தை தோற்றுவிக்க சித்தத்திற்கு உதவுகிறது. இந்த அறிவானது நான்கு வகையாக உள்ளது. தன்னை நோக்கி அறிகின்ற அறிவு (உ.தா) குழந்தை முதன்முதலில் தன் தாயை அறியும் அறிவு. இதையே முதல் அறிவு, பால் அருந்தும் அறிவு என்பர். அனுபவத்தால் தோன்றுகின்ற அறிவு (உ.தா) எலியை நோக்கி பூனை தனக்கு சரியான உணவு எனவும் பூனையை நோக்கி எலி தன்னுடைய எதிரி எனவும் அறியும் அறிவு. இடம், காலம், நிகழ்வு சார்ந்து மாறுகிற அறிவு (உ.தா) வாகனம் ஓட்டுபவர், தட்டச்சு செய்பவர், பல காலம் தொடர்ந்து அந்த செயலை செய்வதனால் அனுபவத்தில் தோன்றுகிற அறிவு.

ஜபம் தியானம் பூஜை இவற்றை செய்வதால் மனிதனுக்கு தோன்றும் அறிவு (உ.தா) ஒரு இடத்தை குறித்து வாகனத்தில் செல்லும்போது முன் பின் பக்கவாட்டில் போகும் வாகனத்தை சார்ந்தும் சாலையில் உள்ள மேடு பள்ளம் சார்ந்தும் செல்ல வேண்டிய இடம் சார்ந்தும் உடனுக்குடன் மாறி சிந்தித்து செயல்படுகிற வாகன ஓட்டுனரின் அறிவு.

இந்த நான்கு அறிவையும் பற்றி அபிராமி பட்டர் குறிப்பிடவில்லை. அவர் குறிப்பிடுவது ஜபஆவர்த்தியின் அதிகத்தால், தியானத்தில் அமர்ந்திருக்கும் நேரத்தின் அதிகத்தில் பூஜையில் பயன்படுத்தும் பொருள்களின் அதிகத்தால் தொடர்ந்து செய்யும் காலத்தால், சாத்திரங்கள் உணர்த்தும் உள்ளுணர்வாக ஏற்படும் பண்பினால் உண்டாவதையே அறிவு என்கிறார்.
பக்தி உணர்வானது

* தன்னை நோக்கி அறிகின்ற அறிவு.
* அனுபவத்தால் தோன்றும் அறிவு.
* இடம், காலம், நிகழ்வு சார்ந்து அறியும் அறிவு.

இவையாவற்றையும் இழக்கச் செய்துவிடும். பூஜை, ஜபம், தியானம் போன்றவற்றுள் மனம் மரத்துப்போய் தன் செயலை, புத்தியை இழந்து விடும் என்பதையே பட்டர்
“அறிவிழந்து” என்கிறார்.

“சுரும்பிற் களித்து’’“சுரும்பு” என்ற சொல்லிற்கு வண்டு என்பது பொருள். “களித்து” என்பதற்கு மிகுந்த மகிழ்ச்சி அடைந்த என்பது பொருள். மனித உள்ளுணர்வுகளைப் பற்றி பேசிக் கொண்டிருகின்ற அபிராமி பட்டர் “சுரும்பிற் களித்து” என்று வண்டுகளைப் பற்றிப் பேசுகிறார் என்பது போல் தோன்றினாலும் வண்டுகளின் [தேனீ] பண்பைக் கொண்டு நாம் ஆன்மிக உணர்வு பெறுவதற்கு அல்லது பெற்ற ஆன்மிக உணர்வு சரிதானா என்பதை உறுதி செய்து கொள்வதற்கு ஞானத்தின் குறியீடாக இதை ஒரு கலைச் சொல்லாகப் பயன்படுத்துகிறார்.

இந்த கலைச் சொல்லால் வண்டிற்குரிய பண்பையும் மானுடர்களுக்கு உண்மையான ஞானம் தோன்றும் போது ஏற்படும் பண்பையும் இணைத்துப் பேசுகிறார். இதற்கு உதாரணமாக ‘ஷட்பத ஸ்தோத்திரம்’ என்று வண்டுகளின் ஆறு கால்களை கொண்டு ஆறு தோத்திரங்களை செய்திருக்கிறார்கள். மேலும் ‘ஹ்ரீங்கார போஜ ப்ருங்கிகாயை நம:’ என்ற உமையம்மையின் திருநாமத்தாலும் வண்டு என்பது ‘ஹ்ரீம்’ என்ற ஆறு அடையாளங்களைக் குறிக்கும். அந்த ஆறையும் ஒவ்வொன்றாக இனிக் காண்போம்.சாத்திரங்கள் உமையம்மையைப் பற்றி அவளின் உண்மைப் பண்பை பற்றி அத்துவா எனப்படும் அவளின் அருளை அடையும் வழி பற்றி [வழி எனும் பொருள்படும் `அத்வா’, ஆறு எனும் பொருள் படும் ‘ஷட்’ என்ற வார்த்தையும் இணைத்து] ‘ஷடத்வா’ எனும் வார்த்தையில் குறிப்பிடுகிறார். இதற்கு இறைவியின் அருளை அடைய ஆறு வழி என்று பொருள் எழுத்து [வர்ணம்] சொல் [பதம்] மறை [மந்திரம்] உலகம் [புவனம்] இருத்தல் இயல்பு [தத்துவம்] உறுப்பு [கலா] என்ற ஆறு இறைவியை அடையும் வழிகள் உள்ளன.

எழுத்து [வர்ணம்] என்பது உமையம்மையின் உடலை குறிக்கும் ஐம்பத்தோரு உறுப்புகள். மனித உடலின் ஒவ்வொரு உறுப்பும் ரத்தம், எலும்பு, தோல், நரம்பு போன்றவற்றால் அமைந்திருப்பது போல உமையம்மைக்கு எழுத்துக்களாலே உருவம் அமைந்திருக்கிறது. இதை ஆகமங்கள் ‘ந்யாசம்’ என்று அழைக்கின்றது. இது ஐம்பத்தோரு உறுப்புகளாக எண்ணி உமையம்மையை வழிபடுவதைச் சொல்கிறது.

சொல் [பதம்] என்று ‘ஓம்’ என்ற வேதத்தில் பரிந்துரைக்கப்படும் சொல்லை இறைவியாகக் கருதி வழிபடுகிறார்கள்.மறை [மந்திரம்] என்பது உமையம்மைக்குரிய ஏகாக்ஷரி, திவயாக்ஷரி, திரயாக்ஷரி, பஞ்சாக்ஷரி, நவாக்ஷரி, திவாதஷாக்ஷரி, பஞ்சதஷாக்ஷரி, சோடஷாக்ஷரி, சதாக்ஷரி, சகஸ்ராக்ஷரி என்ற பத்து மந்திரங்களை இறைவியாகவே கருதி வழிபடுகின்றனர். உலகம் [புவனம்] என்பதனால் உமையம்மையின் ஆலயம் சிந்தாமணி கிரகம் என்றும் உமையம்மை இருக்கும் இடம் உபாசகனின் மனம் என்றும் நான்மறையின் பொருள் சார்ந்த ஞானம்.

அதில் சொல்லப்பட்டிருக்கின்ற உலகியல் பொருள்களைக் கொண்டு செய்யப்படுகின்ற வேள்வி, வேள்விப் பொருள், வேள்வியை செய்கிறவன், வேள்விக்கான மந்திரம் போன்றவையும் மற்றும் சந்திர மண்டலம், கடல், மலை போன்ற ஒன்பதுக்கும் மேற்பட்ட உமையம்மை வெளிப்படையாக யாவரும் அறியும் வண்ணம் தோன்றி அருள்புரியும் இடங்களையே புவனம்
என்கிறார்கள்.

இருத்தல் இயல்பு [தத்துவம்] உலகம், உயிர், இறைவி இவற்றின் தோற்றம் எப்படி? ஏன்? எதனால்? என்ற வினாக்களுக்கு விடையாகத் தோன்றும் உண்மைப் பண்பை இயல்பை உணர்வதை தத்துவம் என்கிறார். அப்படி உணர்வதனால் இறைவியின் அருளை அடையலாம்.

உறுப்பு [கலா] இது மனதைக் குறிக்கும் ஒரு கலைச்சொல்.
பிரத்திஷ்டா கலா – புலன்களின் வழி நினைவு தோன்றுவது.
நிவர்த்தி கலா – நினைவுகள் மறந்து போவது.
வித்யா கலா- தேவையான பொழுது நினைவுக்கு வருவது.

சாந்தி கலா – தேவையான நினைவுகளைத் தவிர மற்ற நினைவுகள் வராமல் இருப்பது.சாந்த்தியாதீத கலா – எண்ணங்கள் வெளிப் படாமல் மனதிற்குள் பாதுகாக்கப்படுவது.
இந்த மனதைப் பற்றிய ஐந்தையும் அறிந்து உணர்ந்து மனதை தன்வயப்படுத்தினால், எண்ணங்களை தூய்மைப்படுத்தினால் கட்டுப்படுத்தினால் உமையம்மையின் அருளைப் பெறலாம். இந்த ஆறையும் மனதில் கொண்டு உமையம்மையை வணங்கும் போதும் தோன்றும் உள்ளுணர்வை “சுரும்பிற் களித்து” என்கிறார்.

இதை எழுத்து [வர்ணம்] `மெய்ப்பீடம்’ (60) சொல் [பதம்] ‘ஒளியே’ (24) மறை [மந்திரம்] ‘மன்னியது உன் திருமந்திரம்’ (6) உலகம் [புவனம்] `பூத்தவளே புவனம் பதினான்கையும்’ (13) இருத்தல் இயல்பு [தத்துவம்] `ஒளிர் திருமேனியை’ (82) உறுப்பு [கலா] ‘வயிரக் குழையும் விழியின் கொழுங்கடையும் துப்பும் நிலவும்’ (78) என்ற ஆறையுமே “சுரும்பிற் களித்து” என்கிறார். இந்த ஆறு வழிகளுமே உமையம்மையின் அருளை நமக்கு பெற்றுத் தரும். அந்த அருளே நமக்கு தீமைகளை நீக்கி நன்மைகளை பெருக்கி நினைத்ததை நடத்தி முக்தியையும் தரவல்லது.

அதனால் தோன்றுகிற மகிழ்ச்சியையே இங்கே “களித்தும்” என்கிறார். “சுரும்பிற் களித்தும்” என்பதனால் பூஜை, தியான, ஜப, ஹோம, ஆசன, ஆச்சார என்ற ஆறுவகை சமய பயிற்சி களாலே தோன்றும் உண்மையாக உள்ள மகிழ்ச்சி அனுபவத்தையே இச்சொல்லால் குறிப்பிடுகிறார். இந்த அனுபவம் என்பது அருளால் அன்றி பெற இயலாது. அருளைப் பெற்றவர்களுக்கு மட்டுமே இந்த ஆனந்தம் தோன்றும். உலகியல் ஆனந்தத்தை அவர் குறிப்பிடவில்லை. இறை அன்பினால், பயிற்சியினால், ஒழுக்கத்தினால், உபாசகன் உள்ளத்துள் தோன்றும் மகிழ்ச்சி. இதையே “சுரும்பிற் களித்து” என்கிறார்.

“மொழி தடுமாறி’’ உமையம்மையை ஆலயங்களிலே சென்று தரிசனம் செய்யும்போது அறுவகை காரணங்களால் பக்தி உணர்வினால் மொழி தடுமாற்றம் தோன்றும். மிகுந்த துக்கத்தை போக்கும் பொருட்டு உமையம்மையை வேண்டும் போது துக்கம் தாளாமல் மொழி தடுமாறும். தொடர்ந்து மந்திரங்களை ஜபம் செய்யும்போது விரைவாகவோ அதை தொடர்ந்து செய்வதனாலோ மந்திர ஜபத்திலுள்ள எழுத்துக்கள் மாறுபடும்.

அதையே ‘`மொழி தடுமாறி’’ என்கிறார். வேத மந்திரங்களை முறையாக பயிற்சியின்றி சொன்னோமேயானால் அதிலுள்ள இசைக் குறிப்புகளான `உதாத்தம்’, ‘அனுதார்த்தம்’, `சமாஹாரம்’ என்று நீட்டிச் சொல்வது, குறுக்கிச் சொல்வது, சமமாக சொல்வது என்ற இடங்களை எந்த இடத்தில் எப்படி சொல்ல வேண்டும் என்பதில் ஏற்படும் தடுமாற்றம் ஒத்தஒலிகளை அடுத்தடுத்து உச்சரிக்கும் போது ஏற்படும் தடுமாற்றம் தொடர்ந்து உச்சரிப்பதனால் நாவறட்சி, கவனச் சிதைவு இவற்றால் ஏற்படும் குறைகளை “மொழி தடுமாறி” என்கிறார்.

இந்த வகையில் தோன்றும் தடுமாற்றங்களை அபிராமிபட்டர் குறிப்பிட்டாலும், இந்தப் பாடலை பொறுத்தவரை அபிராமியை நேரில் காணுகிறபோது அன்பின் காரணமாக, ஆனந்தத்தின் காரணமாக, வியப்பின் காரணமாகத் தோன்றும் தடுமாற்றத்தை “மொழி தடுமாறி” என்கிறார். “முன் சொன்ன எல்லாம் தரும்” “எல்லாம்” என்ற வார்த்தையால் “விரும்பித் தொழும்”, “விழிநீர் மல்கி”, “மெய் புளகம் அரும்பி”, “ததும்பிய ஆனந்தமாகி”, “அறிவிழந்து”, “சுரும்பிற் களித்து”, “மொழி தடுமாறி” என்ற பண்புகளையும் “முன் சொன்ன எல்லாம்” என்று குறிப்பிடுகிறார். மேலும், “எல்லாம்” என்ற வார்த்தையால் இன்னும் ஓரிரு பண்புகள் தோன்றாமல் போகலாம். ஓரிரு பண்புகள் கூடுதலாகவும் தோன்றலாம் என்பதையே குறிப்பிடுகிறார்.

மேலும், இந்த பண்புகள் ஒருவரிடத்தில் இணையும் போது ஒரே நேரத்தில் வெளிப் படுத்தும் போது அதனால் தோன்றும் ஓர் அனுபவத்தையே “எல்லாம் தரும்” என்ற வார்த்தையினால் குறிப்பிடுகிறார். மேலும், முன்சொன்ன என்பதினால் இதற்கு முன்னுள்ள பாடல்களையும் பக்தி உணர்வால், ஞான உணர்வால், அனுபவ உணர்வால் உமையம்மை குறித்து அவர் சொன்ன பண்புகளை “எல்லாம்” உபாசகன் ஒருங்கிணைந்து தியானிக்கும்போது பாடல்களில் சொன்ன கருத்துக்களை புரிந்து கொள்ளும்போது பின்பற்றும் போது தோன்றும் அனைத்தையும் “முன் சொன்ன எல்லாம்” என்கிறார். மேலும், வேத, ஆகம, புராணம் அனைத்திலும் உள்ள உமையம்மையை பற்றிய ஞான அனுபவங்களை “முன் சொன்ன எல்லாம் தரும்” என்கிறார்.

“பித்தர்’’ என்பது அன்பின் மிகுதியினால் அறிவிற்கும் பொருந்தாது கலங்கும் ஒரு பண்பு. தாய்க்குக் குழந்தையின் மீது “பித்து” என்று கூறினால் அது தகும். அன்பின் முதிற்சியால் தோன்றும் உபாசனை நெறிகள் எல்லாம் மறந்து போகின்ற அருளில் திளைக்கின்ற பண்பு. இப்பண்புடையவர்கள் உபாசகராக இருந்த போது, சரியான நேரத்தில் சரியான மந்திரத்தை சரியாகச் சொல்வார்கள் பூசனையும் சரியாக செய்வார்கள். அதன் பயனாய் உமையம்மை நேரிலே வந்து அருளிய பிறகு அதனால் ஏற்படும் மாற்றத்தால் அதற்குப்பின் தோன்றுகிற நிலைக்கு “பித்து” என்று பெயர். இந்த நிலையில் உபாசனையை சரியாக செய்ய மாட்டார்கள்.

ஆனால், உபாசனையின் பலனை, அருளை அடைந்ததனால் அதற்கான செயல்களை செய்ய விரும்பவில்லை, பார்ப்போருக்கு “பித்தர்” போன்று காட்சி அளிப்பர். உமையம்மையைக் குறித்த அருளையும் முக்கால அறிவையும் பெற்றிருப்பர். மேலும் “பித்தர்” என்ற சொல் சிவபெருமானையும் குறிக்கும். சிவபெருமான் உமையம்மையின் முதல் உபாசகனாவர் என்கிறது சாக்தமதம். இதை அவர் இந்த உலகம் முழுவதையும் படைத்தும், காத்தும், அழிக்கவல்ல ஆற்றலைப் பெற்றிருந்தாலும் உமையம்மையின் அருளால் அன்பால் தோன்றிய “பித்து” என்ற பண்பால் திரிகின்ற பண்பை பெற்றதையே “பித்தர்” என்கிறார்.

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

 

The post எல்லாம் தந்து ஆனந்தமாய் அருளும் அன்னை – அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம் appeared first on Dinakaran.

Read Entire Article