மதுரை : எல்.ஐ.சி விவகாரம் தொழில்நுட்ப கோளாறில்லை, ஒன்றிய அரசின் நிர்பந்தத்தால் ஏற்பட்ட அரசியல் கோளாறு என மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார். ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி இணையதளம் முழுவதுமாக இந்தி மொழிக்கு மாற்றப்பட்டதால் வாடிக்கையாளர்கள் கடும் குழப்பமும், அதிருப்தியும் அடைந்தனர். இதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தொழில்நுட்பக் கோளாறால் ஆங்கில மொழிக்கு பதிலாக இந்தியில் இணையதளம் மாறியதாகவும் அது சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும் எல்ஐசி நிறுவனம் எக்ஸ் வலைதளத்தில் விளக்கம் அளித்தது. இதைத்தொடர்ந்து எல்ஐசி இணையதளத்தின் முகப்பு பக்கம் மீண்டும் ஆங்கிலத்துக்கு மாறியது.
இது தொடர்பாக மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எல்.ஐ.சி இணைய தள இந்தி பிரச்சனையில் “தொழில்நுட்பக் கோளாறு” என்று எல்ஐசி விளக்கம் அளித்தது. எல் ஐ சி யின் இணையதள மொழித் தெரிவில் இந்தி ஆங்கிலம் தவிர மூன்றாவது மொழியாக மராத்தி சொருகப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்காக மராத்தியை நுழைக்க நடந்துள்ள ஏற்பாடு. இதனால் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனை. இது தொழில்நுட்பக் கோளாறில்லை. ஒன்றிய அரசின் நிர்பந்தத்தால் ஏற்பட்ட “அரசியல் கோளாறு என குறிப்பிட்டுள்ளார்.
The post எல்.ஐ.சி விவகாரம் தொழில்நுட்ப கோளாறில்லை, ஒன்றிய அரசின் நிர்பந்தத்தால் ஏற்பட்ட அரசியல் கோளாறு :மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் appeared first on Dinakaran.