எல்.ஐ.சி. இணையதளம் இந்தி மொழியில் மாற்றியமைப்பு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

1 month ago 5

சென்னை: ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் இணையதளப் பக்கம் ஆங்கிலத்தில் இருந்து இந்தி மொழியில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

* அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: எல்ஐசி இணையதளத்தில் இயல்புநிலை மொழியாக இந்தி மாற்றப்பட்டிருக்கிறது. இந்தி மொழி தெரியாத மக்களுக்கு தற்போது எல்ஐசி-யின் இணையதளம் பயன்படுத்த முடியாத அளவிற்கு உள்ளது. எங்கு, எதில் எப்படி இந்தியை திணிக்கலாம் என்ற முனைப்பிலேயே ஒன்றிய அரசு செயல்படுவது கண்டனத்திற்குரியது.

* தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: எல்ஐசி இணைய தளத்தை இந்தி மயமாக்கியிருக்கும் ஒன்றிய அரசுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஒன்றிய அரசின் துறைகளின் லோகோக்களை காவி மயமாக்குவது அல்லது அதனுடைய இணைய தளத்தை இந்தி மயமாக்குவது. இந்த இரண்டையும் தன்னுடைய கொள்கைகளாக வைத்திருக்கும் ஒன்றிய அரசுக்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

* மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: எல்ஐசியின் இணையதளம் அனைத்து மாநில மொழிகளிலும் இயங்கினால்தான் நன்மை தருவதாக இருக்கும். ஆனால் ஒன்றிய பாஜ அரசு, இந்தி மொழியில் எல்ஐசி இணையதளத்தை மாற்றியதன் மூலம் இந்தி பேசாத மாநில மக்களுக்கு பச்சை துரோகம் இழைத்திருப்பது கண்கூடாக தெரிகிறது.

* பாமக நிறுவனர் ராமதாஸ்: இந்தியாவில் உள்ள அனைத்து மொழி பேசும் மக்களும் எல்ஐசி-யின் வாடிக்கையாளர்களாக இருக்கும் நிலையில், இந்திக்கு மட்டும் திடீர் முன்னுரிமை அளிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒன்றிய அரசும், ஒன்றிய அரசின் நிறுவனங்களும் காலம் காலமாக தமிழ் உள்ளிட்ட பிற மொழி பேசும் மக்கள் மீது தொடர்ந்து இந்தியைத் திணிக்க முயன்று வருகின்றன.

* தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: எல்.ஐ.சி இணையதளத்தில் குழப்பத்திற்கு இடம் கொடுக்காத வகையில் ஆங்கிலமும், இந்தியும் வழக்கமாகப் பயன்படுத்தப்பட வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களும் பயன்படுத்தும் பொதுவான மொழியான ஆங்கிலத்திலும் இணையதளப் பயன்பாடு இருப்பது தான் சரியானது.

* மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா: இணையதளத்தை இந்திக்கு மாற்றியிருப்பது பல்வேறு மொழி இன மக்கள் வாழும் இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.

* சர்வாதிகாரத்தின் ஆயுள் நீடிக்காது: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
சர்வாதிகாரத்தின் ஆயுள் நீண்ட நாள் நீடிக்காது என்று ஒன்றிய அரசின் இந்தி திணிப்புக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு: ஒட்டுமொத்த நாட்டு மக்களின் பங்களிப்போடு செயல்பட்டு வரும் எல்.ஐ.சி.யின் இணையதளம் முழுக்க, முழுக்க இந்திமயமாக்கப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். அந்த இணையதளத்தை ஆங்கிலத்தில் பார்ப்பதற்கான வசதியைக் கூட இந்தியில் உள்ள சுட்டியின் மூலம்தான் பெற முடியும் என்பது ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு மோகத்தையே அடிக்கோடிட்டு காட்டுகிறது.

தமிழ், ஆங்கிலம் உள்பட அனைத்து மாநில மொழிகளிலும் எல்ஐசி இணையதளத்தை மக்கள் பயன்படுத்தும் வகையில் உடனே மாற்றி அமைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்தி உள்பட எந்த ஒன்றையும் வலுக்கட்டாயமாக திணிப்பதன் மூலம் வளர்த்துவிட முடியாது என்பதை ஒன்றிய அரசு இன்னும் புரிந்துகொள்ளவில்லை. சர்வாதிகாரத்தின் ஆயுள் நீண்ட நாள் நீடிக்காது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* மீண்டும் ஆங்கிலத்துக்கு மாறிய எல்ஐசி இணையதளம்
ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி இணையதளம் முழுவதுமாக இந்தி மொழிக்கு மாற்றப்பட்டதால் வாடிக்கையாளர்கள் கடும் குழப்பமும், அதிருப்தியும் அடைந்தனர். இதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், தொழில்நுட்பக் கோளாறால் ஆங்கில மொழிக்கு பதிலாக இந்தியில் இணையதளம் மாறியதாகவும் அது சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும் எல்ஐசி நிறுவனம் எக்ஸ் வலைதளத்தில் நேற்று மாலை விளக்கம் அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து எல்ஐசி இணையதளத்தின் முகப்பு பக்கம் மீண்டும் ஆங்கிலத்துக்கு மாறியது.

The post எல்.ஐ.சி. இணையதளம் இந்தி மொழியில் மாற்றியமைப்பு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article