
திருவனந்தபுரம்,
மோகன்லால் நடிப்பில், மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'லூசிபர்' படத்தின் 2-ம் பாகமாக உருவான 'எல் 2 எம்புரான்' கடந்த 27-ம் தேதி வெளியானது. மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிவேகமாக ரூ. 100 கோடி வசூல் செய்த மலையாள படம் என்ற புதிய சாதனையை 'எல் 2 எம்புரான்' படைத்திருக்கிறது. இதுவரை இப்படம் ரூ.250 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
'எல் 2 எம்புரான்' படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி கேரள ஐகோர்ட்டில் பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் திரைப்படத்திற்கு தடை விதிக்க கேரள ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துவிட்டது.
கடந்த 4ம் தேதி, படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கோகுலம் கோபாலனுக்கு சொந்தமான சிட்பண்ட் நிறுவன அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. கோகுலம் சிட்பண்ட் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்தது.
பிருத்விராஜுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது, கோல்ட், ஜன கண மன, மற்றும் கடுவா ஆகிய மூன்று படங்களை கடைசியாக பிருத்விராஜ் தயாரித்து நடித்திருந்தார்.இதில், பிருத்விராஜ் ஒரு நடிகருக்கான சம்பளத்தை பெறவில்லை. அதற்கு பதிலாக, அவர் ஒரு இணை தயாரிப்பாளராக சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. அதன்படி, இணை தயாரிப்பாளராக பிருத்விராஜ் சுமார் ரூ. 40 கோடி பெற்றதாக தெரிகிறது. இதனையடுத்து இந்த 3 படங்களின் வருமான கணக்குகளை கேட்டு வருமான வரித்துறை பிருத்விராஜுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இதற்கு வருகிற 29-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 'எம்புரான்' திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அந்தோணி பெரும்பாவூருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. படத்தின் இயக்குநரும் நடிகருமான பிரித்விராஜ் சுகுமாரனுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இவற்றைத் தொடர்ந்து அந்தோணி பெரும்பாவூருக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பாஜக அரசை விமர்சிப்பவரகளை அச்சுறுத்துவதற்காக 'எம்புரான்' திரைப்படத்துடன் தொடர்புடையவர்கள் மீது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அமலாக்கத் துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகள் ஏவிவிடப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் அந்தோணி பெரும்பாவூரின் ஆசீர்வாத் சினிமாஸ் நிறுவனத்தில் நிகழ்ந்த முறைகேடுகளுக்காக 2022ம் ஆண்டில் நடத்தப்பட்ட சோதனையின் தொடர்ச்சியாகவே இப்போது நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளதாக வருமான வரித்துறை கூறியுள்ளது. லூசிபர் மற்றும் குஞ்சாலி மரக்கார் படங்களில் நிதி முறைகேடு தொடர்பாக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.