
புதுடெல்லி,
சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த குடியிருப்பை, தற்போதைய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயராக இருந்தபோது, அதிகார துஷ்பிரயோகம் செய்து, போலி ஆவணங்கள் மூலம் தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றம் செய்துள்ளதாக சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சுதான்ஷு துலியா, கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.
மா.சுப்பிரமணியன் சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி ஆஜராகி, கடந்த 1998-ம் ஆண்டு வீடு வாங்கியது தொடர்பாக 20 ஆண்டுகளுக்கு பின் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விற்பனை நடந்ததாக கூறப்படும் காலத்தில் மாநகராட்சி மேயராக பதவி வகித்த நிலையில், வழக்கு தொடர சபாநாயகர் அனுமதியளிக்க அதிகாரம் இல்லை என வாதிட்டார்.
இதற்கு பார்த்திபன் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஏ.சிராஜுதீன் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து விரிவான விசாரணைக்கும், மனுதாரர் தரப்பில் முன்வைக்கும் வாதங்களை சுட்டிக்காட்டும் தீர்ப்புகளை கேட்டறியும் வகையில் விசாரணையை மே 21-ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.