தேர்வு தோல்வி பயத்தால் தற்கொலை செய்த பிளஸ்-1 மாணவர் தேர்ச்சி - பெற்றோர் கதறல்

7 hours ago 1


தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி பிரியா. இவர்கள் குடும்பத்துடன் திருப்பூர் சூசையாபுரம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.முதல் மகன் கல்லூரியில் படிக்கிறார்.

2-வது மகன் பாலகணேஷ் (வயது 16) பிளஸ்-1 தேர்வு எழுதி இருந்தார். தற்போது கோடை விடுமுறை என்பதால் அவர், தேனியில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தார். நேற்று பிளஸ்-1 தேர்வு முடிவுகள் வெளியாவதால் பாலகணேசை அவரது பெற்றோர் திருப்பூர் வருமாறு அழைத்தனர். இதையடுத்து பாலகணேஷ் தேனியில் இருந்து நேற்று முன் தினம் திருப்பூர் வந்தார்.

அப்போது அவரது பெற்றோர் பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று இருந்தனர். வேலை முடிந்ததும் அவர்கள் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பாலகணேஷ் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், பாலகணேசை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் மாணவர் பாலகணேஷ் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றது தெரியவந்தது. இவர் தமிழ் 45, ஆங்கிலம் 37, வரலாறு 48, பொருளாதாரம் 42, வணிகவியல் 35, கணக்குப்பதிவியல் 35 என மொத்தம் 242 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற மன குழப்பத்தில் தேர்வு முடிவுக்கு ஒரு நாளுக்கு முன்னதாக மாணவர் எடுத்த விபரீத முடிவை நினைத்து அவரது பெற்றோர் கதறியது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

Read Entire Article