எம்பிபிஎஸ் படிப்புக்கான என்ஆர்ஐ ஒதுக்கீட்டு இடங்களுக்கு போலி சான்றிதழ் சமர்ப்பித்த 20 பேர் நீக்கம்: ரூ.40 லட்சம் பறிமுதல் – சென்டாக் நிர்வாகம் அதிரடி

3 weeks ago 4

 

புதுச்சேரி, அக். 25: புதுச்சேரியில் எம்பிபிஎஸ் படிப்புக்கான என்ஆர்ஐ ஒதுக்கீட்டு இடங்களை பெற போலி சான்றிதழை சமர்ப்பித்த 20 மாணவர்களை சென்டாக் நிர்வாகம் கண்டறிந்து அதிரடியாக நீக்கியுள்ளது. மேலும் அந்த மாணவர்கள் பதிவு கட்டணமாக செலுத்திய ரூ.40 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஏஎம்எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு 2 சுற்றுகளாக கலந்தாய்வு நடத்தி அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு மற்றும் என்ஆர்ஐ ஒதுக்கீட்டில் உள்ள இடங்கள் நிரப்பப்பட்டன. 2 கட்ட கலந்தாய்வு முடிவில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான 3வது சுற்று தற்காலிக சீட் ஒதுக்கீடு பட்டியல் கடந்த 21ம் தேதி சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இதில் சீட் ஒதுக்கப்பட்ட மாணவர்கள் அக்.23ம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டுமென சென்டாக் நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது. இதன் ஒரு பகுதியாக, என்ஆர்ஐ (வெளிநாடு வாழ் இந்தியர்) ஒதுக்கீட்டில் காலியாக உள்ள 79 இடங்களுக்கும் சீட் ஒதுக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே என்ஆர்ஐ ஒதுக்கீட்டு இடங்களுக்கு என்ஆர்ஐ ஸ்பான்சர் என்ற பெயரில் பல மாணவர்கள் போலி சான்றிதழ் சமர்ப்பித்து, எம்பிபிஎஸ் படிப்பில் சேர்வதாகவும், இடைத்தரகர்கள் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு போலி சான்றிதழ் தயார் செய்து கொடுப்பதாகவும் கவர்னர், முதல்வர், கல்வித்துறை செயலர், சுகாதாரத்துறை செயலர் மற்றும் சென்டாக் நிர்வாகத்துக்கு சென்டாக் மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து 3ம் கட்ட இளநிலை மருத்துவ படிப்பில் என்ஆர்ஐ பிரிவில் சீட் ஒதுக்கப்பட்ட மாணவர்களுக்கு காமராஜர் மணிமண்டபத்தில் உள்ள சென்டாக் அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். இதில் என்ஆர்ஐ மற்றும் என்ஆர்ஐ ஸ்பான்சர் ஆகிய பிரிவில் விண்ணப்பித்து சீட் ஒதுக்கப்பட்ட மாணவர்கள் உரிய ஆவணங்களோடு வருமாறு சென்டாக் நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது. அதன் அடிப்படையில், கடந்த 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை சென்டாக் அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இப்பிரிவில் சீட் ஒதுக்கப்பட்ட 79 பேரில் 41 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

இவர்களது சான்றிதழ்களை சென்டாக் அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்தனர். அப்போது சில சான்றிதழ்களில் பெயர்கள் எழுத்து பிழைகளோடும், வித்தியாசமாகவும் இருந்தது தெரியவந்தது. சில சான்றிதழ்களில் இடம் பெற்றிருந்த சீல்களும் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்தன. இதையடுத்து அனைத்து சான்றிதழ்களையும் சென்டாக் அதிகாரிகள் ஸ்கேன் செய்து, என்ஆர்ஐ மற்றும் என்ஆர்ஐ ஸ்பான்சர்கள் வசிப்பதாக குறிப்பிடப்பட்டிருந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களுக்கு அனுப்பி விசாரித்தனர்.

அப்போது, 21 பேர் மட்டுமே அசல் சான்றிதழ்களை சமர்ப்பித்துள்ளதும், மீதமுள்ள 20 பேரின் சான்றிதழ் போலி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த மாணவர்களின் சேர்க்கை அதிரடியாக நீக்கப்பட்டன. மேலும், என்ஆர்ஐ ஒதுக்கீட்டு இடங்களுக்கு பதிவுக் கட்டணமாக தலா ரூ.2 லட்சம் வீதம் 20 மாணவர்கள் செலுத்திய ரூ.40 லட்சத்தையும் சென்டாக் நிர்வாகம் பறிமுதல் செய்து கொடுத்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

* போலி சான்றிதழ் பெற்றது எப்படி?
பிள்ளைகள் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றாலும், அவர்களை எப்படியாவது எம்பிபிஎஸ் படிக்க வைக்க வேண்டுமென்று வசதி படைத்த பல பெற்றோர் நினைக்கின்றனர். இதுபோன்ற பெற்றோர்களை இடைத்தரகர்கள் குறி வைத்து அணுகுகின்றனர். அப்போது, என்ஆர்ஐ ஸ்பான்சர் பெயரில் போலி சான்றிதழ் தயார் செய்து எளிதாக எம்பிபிஎஸ் சீட் வாங்கி கொடுப்பதாகவும், இந்த போலி சான்றிதழை யாரும் கண்டுபிடிக்க முடியாது என்றும் இடைத்தரகர்கள் கூறுகின்றனர்.

இதனை நம்பி பெற்றோர்களும் ரூ.6 லட்சம் வரை இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து, போலியாக என்ஆர்ஐ ஸ்பான்சர் சான்றிதழ்களை பெற்று சென்டாக்கில் சமர்ப்பித்து, எம்பிபிஎஸ் சீட் பெற்று வந்துள்ளனர். இந்த முறைகேடு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது. இதை கண்டுபிடிக்க முடியாமல் பல ஆண்டுகளாக சென்டாக் அதிகாரிகளும் இருந்து வந்துள்ளனர்.

ஆனால் இந்தாண்டு சென்டாக் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையாக சான்றிதழ்களை இந்திய தூதரகத்துக்கு அனுப்பி, போலி சான்றிதழ்களை கண்டறிந்து 20 மாணவர்களை நீக்கியுள்ளனர். இதன்மூலம் 20 மாணவர்களின் பெற்றோர் இடைத்தரகர்களிடம் ரூ.1 கோடிக்கு மேல் பணத்தை கொடுத்து ஏமாந்துள்ளதும் தெரியவந்தது.

* சிபிஐ விசாரணை வேண்டும்
சென்டாக் மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்க தலைவர் நாராயணசாமி கூறுகையில், சென்டாக் நிர்வாகத்தின் இந்நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இத்தகைய முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மீது காவல்துறையிலும், சிபிஐயிலும் புகார் அளித்து கைது செய்ய வேண்டும். இந்த போலி ஆவணங்களை தயாரித்து பலகோடி பெற்ற இடைத்தரகர்களையும் கைது செய்து, அவர்களிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்ய வேண்டும்.

அப்போதுதான் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க முடியும். முறைகேடான முறையில் மருத்துவ படிப்பில் சேர முயன்ற 20 மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட பதிவு கட்டணம் ரூ.40 லட்சத்தை எக்காரணம் கொண்டு சென்டாக் நிர்வாகம் திருப்பி அளிக்கக் கூடாது. மேலும், என்ஆர்ஐ இடஒதுக்கீட்டில் காலியாக உள்ள இடங்களை தகுதியான மாணவர்களை கொண்டு நிரப்ப வேண்டும்.

அதன்பிறகு, நிரப்பாமல் காலியாக உள்ள இடங்களை நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் மாற்றி கலந்தாய்வு நடத்த வேண்டும். என்ஆர்ஐ ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் 1, 2ம் கட்ட கலந்தாய்வில் சேர்ந்த 23 மாணவர்களின் சான்றிதழ்களையும் சென்டாக் நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.

The post எம்பிபிஎஸ் படிப்புக்கான என்ஆர்ஐ ஒதுக்கீட்டு இடங்களுக்கு போலி சான்றிதழ் சமர்ப்பித்த 20 பேர் நீக்கம்: ரூ.40 லட்சம் பறிமுதல் – சென்டாக் நிர்வாகம் அதிரடி appeared first on Dinakaran.

Read Entire Article