
புதுடெல்லி,
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு தெரியப்படுத்தவும், பயங்கரவாதத்திற்கு எதிராக நட்பு நாடுகளை ஒன்றிணைக்கவும் 7 குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் சசி தரூர்( காங்கிரஸ்) ரவி சங்கர் பிரசாத் (பாஜக) , சஞ்சய் குமார் ஜா (ஜேடியு), பைஜயந்த் பாண்டா (பாஜக) , கனிமொழி கருணாநிதி (திமுக) , சுப்ரியா சுலே (என்சிபி), ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே (சிவசேனா) என மொத்தம் 7 எம்.பி.க்கள் இடம்பெற்றுள்ளனர்.இந்த குழுக்கள் இந்தியாவின் நட்பு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளன.
மேலும், ஐ.நா. சபை பிரதிநிதிகளையும் சந்திக்க உள்ளன. இந்த குழுக்கள் பஹல்காம் தாக்குதல், அதற்கான இந்தியாவின் பதிலடியான ஆபரேஷன் சிந்தூர், பயங்கரவாதத்திற்கு எதிரான செயல்பாடுகளை தீவிரப்படுத்துதல் உள்ள இந்தியாவின் கருத்துக்களை உலக நாடுகளிடம் தெரிவிக்க உள்ளன.
இந்த நிலையில், எம்.பி.க்கள் குழுக்கள் செல்லும் நாடுகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-
* திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான குழு ஸ்பெயின், கிரீஸ், ஸ்லோவாக்கியா, லாத்வியா, ரஷியா செல்கிறது. குழுவில் ராஜீவ் ராய், பிரேம் சந்த் குப்தா, அசோக்குமார் மிட்டல், மஞ்சீவ் எஸ். பூரி, ஜாவேத் அஷ்ரப், பிரிஜேஷ் சௌதா, மியான் அல்தாப் அஹ்மத் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
* காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தலைமையான குழு அமெரிக்கா, பனாமா, கயானா, பிரேசில், கொலம்பியா செல்கிறது. இந்த குழுவில் தேஜஸ்வி சூர்யா, சர்பாஸ் அகமது, சாம்பவி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
* பாஜக எம்.பி. ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான குழு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐரோப்பிய ஒன்றியம், இத்தாலி, டென்மார்க் செல்கிறது.
* சிவசேனாவின் ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான குழு அமீரகம், லைபீரியா, லைபீரியா, காங்கோ ஜனநாயக குடியரசு, சியரா லியோன் ஆகிய நாடுகளுக்கு செல்கிறது.
* ஜேடியுவின் சஞ்சய்குமார் ஜா தலைமையிலான குழு இந்தோனேசியா, மலேசியா, கொரியா, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு செல்கிறது.
* பாஜகவின் பைஜெயந்த் பண்டா தலைமையிலான குழு சவுதி, குவைத், பஹ்ரைன், அல்ஜீரியாவுக்கு செல்கிறது.
* என்.சி.பி-எஸ்.சி.பி. சுப்ரியா சுலே தலைமையிலான குழு எகிப்து, கத்தார், எத்தியோப்பியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு செல்கிறது.