இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த படத்தை பெங்களூருவைச் சேர்ந்த ஒரு தயாரிப்பு நிறுவனம் பான் இந்தியன் தயாரிப்பாக உருவாக்க உள்ளது. இதனால் எம்.எஸ். சுப்புலட்சுமியின் உருவத்துக்கு ஒத்துப் போகும் ஒரு தென்னிந்திய நடிகையை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நடிகை வித்யா பாலன் தனது சமீபத்திய எம்.எஸ்.எஸ் தோற்றத்தால் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறார். 1916ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி மதுரையில் பிறந்தவர் எம்எஸ் சுப்பு லட்சுமி. மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி என்பது இவரின் முழுப்பெயர். இவரது பெற்றோர் சுப்ரமணிய ஐயர், சண்முக வடிவு அம்மாள். சுப்ரமணிய ஐயர் வழக்கறிஞர், சண்முகவடிவு அம்மாள் சிறந்த வீணை இசைக்கலைஞர். இவருக்கு கடந்த செப்டம்பர் 16ம் தேதி பிறந்தநாள் இதனை முன்னிட்டு முன்னணி நடிகையான வித்யாபாலன் எம்.எஸ்.சுப்புலட்சுமியை அப்படியே கண் முன் கொண்டு வரும் தோற்றத்தில் மேக்கப், மற்றும் ஸ்டைலிங் செய்து இணையத்தில் வைரலாகி வருகிறார். இந்த தோற்றத்திற்கு முழுமையான தனது திறமையைக் கொடுத்திருக்கிறார் ஆடை வடிவமைப்பாளர் அனு பார்த்தசாரதி. ‘வேட்டையாடு விளையாடு’, ‘குரு’, ‘ரெமோ’ உள்ளிட்ட பல படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளர் அனு பார்த்தசாரதிதான். மறைந்த இயக்குநர், கதையாசிரியர், வியட்நாம் வீடு சுந்தரத்தின் மகள்தான் அனு பார்த்தசாரதி.
இதுகுறித்து வித்யாபாலன் கூறுகையில், ‘எனக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவை ரொம்பப் பிடிக்கும். என் அம்மா காலையில் எழுந்தவுடன் முதலில் எம்.எஸ்.எஸ் அம்மா குரலில் சுப்ரபாதம்தான் வீட்டில் ஒலிக்க விடுவார். என் அன்றாட வாழ்க்கையே எம்.எஸ் அம்மாவின் குரலில்தான் தொடங்குகிறது. என்னைப் பொறுத்தவரை எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவை ஒரு தூய ஆன்மிக அனுபவமாகவே உணர்கிறேன். அவருக்கு செய்யும் மரியாதையாகவும், அவர்பால் கொண்ட அன்பாலும் அவர் தோற்றத்தை நானும், அனுவும் இணைந்து கொண்டு வந்திருக்கிறோம். குரலால் மட்டுமல்லாமல் தன்னுடைய தனித்துவமான புடவைகள், தோற்றம், என கவனம் ஈர்த்தவர் எம்.எஸ் அம்மா. இந்த ஸ்டைலிங் மற்றும் மேக்கப் அவருக்கு நான் செய்யும் மரியாதை‘ . என்கிறார் வித்யா பாலன் ஆடை வடிவமைப்பாளர் அனு பார்த்தசாரதி இந்த சிறப்பு எம்.எஸ் லுக் குறித்து கூறுகையில், ‘வித்யாபாலனுடன் இணைந்து எம்.எஸ் அம்மாவின் தோற்றத்தை உருவாக்க பணியாற்றியது எனது பாக்கியம். எம்.எஸ்.அம்மா ஒரு சகாப்தம் அவருக்கு இவ்வேளையில் மரியாதை செய்யும் பொருட்டு வித்யாபாலன் எடுத்துக்கொண்ட இந்த புராஜெக்ட்டில் நானும் இணைந்திருப்பது பெருமையாகக் கருதுகிறேன். வித்யாபாலனின் அர்ப்பணிப்பும், உடல் மொழியும் எம்.எஸ் அம்மாவின் தோற்றத்தை அப்படியே கொண்டு வந்தது. இந்த ஸ்டைலிங் நிச்சயம் இளம் தலைமுறைக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவின் இசை சேவையையும், திறமையையும் திரும்பிப் பார்க்க வைக்க ஒரு தூண்டுகோலாக இருக்கும் என
நம்புகிறேன்’. என பெருமையுடன் பகிர்ந்தார் அனு பார்த்தசாரதி.
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தோற்றத்திற்காக 1960 – 1980களின் அவர் இசைக்கச்சேரிகளில் அவர் தோன்றிய புடவைகள், மற்றும் தோற்றத்தைக் கொண்டு புடவைகளை உருவாக்கியிருக்கிறார் அனு பார்த்தசாரதி. குறிப்பாக காஞ்சிபுரம் நெசவாளர்களின் உதவியுடன் பிரத்யேகமாக நெய்து பெற்றுள்ளார். போலவே நெற்றியில் குங்குமம், சின்ன பொட்டு, எளிமையான நகைகள் என இணைந்து வித்யாபாலனின் தோற்றம் அப்பட்டமாக எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவை கண் முன் நிறுத்தியிருக்கிறது என்றாலும் மிகையாகாது.
– கவின்
The post எம்.எஸ்.அம்மா :ஒரு ஆன்மிக அனுபவம்! appeared first on Dinakaran.