'எமர்ஜென்சி' படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க நடிகை கங்கனா சம்மதம்

3 months ago 30

மும்பை,

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் 'எமர்ஜென்சி'. இதில், இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார். படத்தை அவரே இயக்கியும் உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். கடந்த ஆண்டே இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், சில குறிப்பிட்ட காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் படத்தை கடந்த 6-ந் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தது. எனினும் சீக்கிய அமைப்பினர் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மத்திய தணிக்கை குழு படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதை எதிர்த்து படக்குழு மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.

இந்தநிலையில் நேற்று இந்த மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது தணிக்கை குழு சார்பில் ஆஜரான வக்கீல், படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க நடிகை கங்கனா ரணாவத் ஒப்புக்கொண்டு இருப்பதாக தெரிவித்தார். மேலும் படத்தில் இருந்து நீக்க வேண்டிய காட்சிகள் ஒரு நிமிடத்துக்கு மேல் கூட இருக்காது, எனவே காட்சிகளை நீக்குவதால் படத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் தணிக்கை குழு தரப்பில் ஐகோர்ட்டில் கூறப்பட்டது.

படக்குழு சார்பில் ஆஜரான வக்கீல் காட்சிகளை நீக்குவதை உறுதி செய்ய தங்களுக்கு காலஅவகாசம் வழங்கவேண்டும் என நீதிபதிகளிடம் கேட்டார். இதையடுத்து நீதிபதிகள் மனு மீதான விசாரணையை வருகிற 3-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Read Entire Article