
புதுடெல்லி,
10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 58 லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின. மீதமுள்ள 7 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற போட்டியிட்டு வருகின்றன.
இந்த தொடரில் குஜராத் அணியில் தமிழக வீரர்களான சாய் கிஷோர், ஷாரூக் கான், சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில் சாய் கிஷோர் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் குஜராத் அணியின் பிளேயிங் லெவனில் தொடர்ந்து இடம் பிடித்து அசத்தி வருகின்றனர். நடப்பு தொடரில் 11 ஆட்டங்களில் ஆடியுள்ள சாய் கிஷோர் இதுவரை 14 விக்கெட்டுகளை வீழ்த்தி குஜராத்தின் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றி வருகிறார்.
இவர் கடந்த 2022ம் ஆண்டு குஜராத் அணியில் இணைந்தார். அதற்கு முன் இரண்டு ஆண்டுகள் சி.எஸ்.கே. அணியில் இடம் பெற்றிருந்த சாய் கிஷோர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்த இரண்டு ஆண்டுகள், பயிற்சி பெறுவதற்கு ஒரு சிறந்த களமாக இருந்ததாகவும், என் கிரிக்கெட் அங்கு தான் வடிவமைக்கப்பட்டது எனவும் சாய் கிஷோர் சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, என்னை வடிவமைப்பதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முக்கிய பங்காற்றியது. அந்த இரண்டு வருடம் நான் பயிற்சி பெறுவதற்கு பெரிய உதவியாக அமைந்தது. சையத் அலி தொடரிலிருந்து என்னை முதலில் ஏலத்தில் எடுத்த அணி சி.எஸ்.கே தான். நான் நிறைய கற்றுக் கொண்டேன் வெவ்வேறு சூழ்நிலைகளை எப்படி கையாள்வது என்பது குறித்து தொடர்ந்து கேள்விகளை கேட்பேன்.
உண்மையைச் சொல்ல வேண்டுமானால் நீங்கள் விளையாடும் போது மட்டுமே அதிகமாக கற்றுக் கொள்கிறீர்கள். இந்த கோட்பாடுகள் அனைத்தும் உங்கள் தலையில் மட்டுமே இருக்கும் தவிர, விளையாடும் போது தான் பல்வேறு அனுபவங்கள் பெற முடியும். எம்.எஸ். தோனியை கடந்து என்னால் பார்க்க முடியவில்லை. ஆனால், அவர் அணியை வழிநடத்திய விதம் என் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
வெவ்வேறு சூழ்நிலைகளில் அவர் அணுகிய அமைதி அதுதான் நான் விளையாட்டை பார்க்கும் விதத்தையும் செயல்படும் விதத்தையும் வடிவமைத்தது. மேலும், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் தோனி ஆகிய இருவரும் தான் என் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். இவர்கள் இருவரும் என் கிரிக்கெட்டை வடிவமைத்ததில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.