* 7 முறை கருக்கலைப்புக்கு ஆதாரத்தை காட்டி அடுக்கடுக்கான கேள்வி
* 100 மீட்டர் தொலைவில் கட்சி தொண்டர்களை போலீஸ் தடுத்து நிறுத்தியது
சென்னை: நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கு தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று இரவு 9.35 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் கணவன், மனைவி போல் வாழ்ந்தது தொடர்பாகவும், 7 முறை கருக்கலைப்பு செய்தது உள்பட 100க்கும் மேற்பட்ட கேள்விகளை விசாரணை அதிகாரிகள் கேட்டனர். அதற்கு சீமான் அளித்த பதிலை போலீசார் வழக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். காவல் நிலையம் அருகே கட்சி தொண்டர்கள் குவிந்ததால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வளசரவாக்கம் போலீசார், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று நேரில் ஆஜராக வேண்டும் என்று கடந்த 24ம் தேதி சம்மன் வழங்கினர். ஆனால், சீமான் தனக்கு ஏற்கனவே திட்டமிட்ட கட்சி பணிகள் இருப்பதால் நேரில் ஆஜராக 4 வார காலம் அவகாசம் கேட்டு வழக்கறிஞர் மூலம் விசாரணை அதிகாரிகளிடம் நேற்று கடிதம் வழங்கப்பட்டது. ஆனால், நடிகை பாலியல் வழக்கு விசாரணையை 12 வாரங்களில் முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதால், 4 வாரம் காலம் அவகாசம் கொடுக்க முடியாத நிலை காவல்துறைக்கு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து, சட்ட நிபுணர்களுடன் நடத்திய ஆலோசனைப்படி மீண்டும் நேற்று காலை 11 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று 10 நிபந்தனைகளுடன் சின்ன நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் போலீஸ் சம்மனுக்கான நோட்டீசை ஒட்டினர். சம்மன் ஒட்டப்பட்ட சில விநாடிகளில் சீமான் வீட்டு காவலாளி மற்றும் பணியாளர் மூலம் அது கிழித்து எறியப்பட்டது.
இதற்கிடையே சீமான் நேற்று முன்தினம் ஓசூரில் கட்சி நிகழ்ச்சியின் போது, ‘என்னால் அவர்கள் கூறும் நேரத்தில் நேரில் வர முடியாது….என்ன செய்ய முடியும் என்று காவல்துறையை மிரட்டும் வகையில் சவால் விட்டார். எனக்கு கட்சி ஆலோசனை கூட்டம் இருக்கிறது என்று கூறியிருந்தார். காவல்துறை இறுதி கெடுவாக நேரில் ஆஜராக வில்லை என்றால் கைது செய்ய காவல்துறை முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த தகவல் சீமான் கவனத்திற்கு சென்றது. நீதிமன்ற உத்தரவு இருப்பதால் இந்த வழக்கில் கால அவகாசம் கேட்க முடியாது என்றும், மற்ற வழக்குகள் போல் இந்த வழக்கு இல்லை. இது பாலியல் வழக்கு, காவல்துறை தனது கடமையை செய்யும் என்பதால் நேரில் ஆஜராவது நமக்கு நல்லது என்று அவரது சட்ட ஆலோசகர்கள் சீமானிடம் அறிவுரை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதன் பிறகு நேற்று மதியம் திருநெல்வேலி செல்லும் பயணத்தை ரத்து செய்துவிட்டு, சேலத்தில் இருந்து விமானம் மூலம் மாலை சென்னைக்கு வந்தார். பிறகு வடபழனியில் உள்ள கிரீன் பார்க் ஓட்டலில் தனது வழக்கறிஞர்களுடன் நீண்ட ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து அவரது வழக்கறிஞர்கள் காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரிகளிடம் மாலை 6 மணிக்கு சீமான் ஆஜராவர் என்று உறுதி அளித்தனர்.
அதேநேரம் நாம் தமிழர் கட்சி தலைமையில் இருந்து தொண்டர்களுக்கு நேற்று மாலை 6 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாலை 4 மணி முதலே வளசரவாக்கம் காவல் நிலையம் அருகே ஒன்று கூடினர். அதேநேரம், கட்சியினர் அதிகளவில் வருவார்கள் என்று உளவுத்துறை அளித்த தகவலின்படி கோயம்பேடு துணை கமிஷனர் அதிவீரப்பாண்டியன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் வளசரவாக்கம் காவல் நிலையம் முன்பு குவிக்கப்பட்டனர்.
காவல் நிலையம் அமைந்துள்ள 100 மீட்டர் தொலைவுக்கு முன்பே தடுப்புகள் அமைத்து நாம் தமிழர் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் நாம் தமிழர் கட்சியினர் வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் அமர்ந்து காவல்துறைக்கு எதிராக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் திட்டமிட்டப்படி சீமான், சேலத்தில் இருந்து விமானத்தில் சென்னை வந்தார். விமான நிலையத்தில் இருந்து வடபழனியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கினார்.
இரவு 8 மணிக்கு மேல் தனது வழக்கறிஞர்களுடன் வளசரவாக்கம் காவல் நிலையம் நோக்கிப் புறப்பட்டார். பின்னர் சாலையில் ஒரு மணி நேரம் காத்திருந்தார். அதன்பின்னர் புறப்பட்டார். காவல்நிலையம் இருந்த ஆற்காடு சாலைக்கு 9.35 மணிக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து காவல்நிலையத்துக்கு 9.55 மணிக்குத்தான் வந்து, விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜரானார். அவரிடம் விசாரணை அதிகாரிகள் ஏற்கனவே தயாராக வைத்திருந்த 100க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டனர்.
அதன்படி நடிகை விஜயலட்சுமிக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு? கோயிலில் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்தது உண்மையா? கணவன், மனைவி போல் ஒரே வீட்டில் வசித்து வந்தது உண்மையா? 7 முறை கருக்கலைப்பு செய்ய மருத்துவமனையில் கணவன் என்ற முறையில் கையெழுத்து போட்டது ஏன், மாதம் மாதம் விஜயலட்சுமிக்கு ₹50 ஆயிரம் கொடுத்தது உண்மையா, ஏன் பணம் கொடுத்தீர்கள் என்று கேள்விகளை கேட்டனர்.
இருவரும் கணவன், மனைவி போல் ஒன்றாக வாழ்ந்த போது, விஜயலட்சுமி தாய் முன்னிலையில் பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோவை சீமானிடம் காண்பித்து, அதில் இருப்பது நீங்கள் தானா? மதுரையில் ஓட்டலில் ஒன்றில் நடிகை விஜயலட்சுமி மற்றும் சீமான் இருவரும் தங்கிய ரசீதுகள் மற்றும் சிசிடிவி காட்சிகளை காண்பித்து கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், கடந்த வாரம் நடிகை விஜயலட்சுமியிடம் சமாதானம் பேச தூது அனுப்பியது உண்மையா? 2023ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி நடிகை விஜயலட்சுமி உங்கள் மீது கொடுத்த புகாரை திரும்ப பெற யார் அழுத்தம் கொடுத்தது.
தனக்கு சீமான் தரப்பில் இருந்து அழுத்தம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளாரே…. அதற்கு என்ன நீங்கள் சொல்லும் பதில் என்ன என அடுக்கடுக்கான கேள்விகளை விசாரணை அதிகாரிகள் கேட்டனர். அந்த கேள்விகளில் பல கேள்விகளுக்கு சீமான் எனக்கு தெரியாது என்று கூறியதாக கூறப்படுகிறது. அப்போது போலீசார் அதற்கான வீடியோ காட்சிகள் மற்றும் வங்கி பணப்பரிமாற்றம் செய்த ஆவணங்களை காட்டி விளக்கம் கேட்டனர். அதற்கு சீமான் அளித்த பதிலை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்தனர். சீமானிடம் இரவு 11.15 மணிவரை விசாரணை நடத்தப்பட்டு வீடியோ பதிவு செய்யப்பட்டது.
* முன்னெச்சரிக்கையாக கடைகள் மூடப்பட்டது
சீமான் காவல் நிலையத்திற்கு வரும் தகவல் அறிந்து வளசரவாக்கம் காவல் நிலையம் அமைந்துள்ள பகுதிகளில் நாம் தமிழர் கட்சியினர் குவிந்தனர். இதனால் வியாபாரிகள் பலர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது கடைகளை மூடினர். இருந்தாலும் திறந்து இருந்த கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
The post ‘என்னால் வர முடியாது’ என சவால் விட்ட நிலையில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமானிடம் கிடுக்கிப்பிடி விசாரணை appeared first on Dinakaran.