‘பெல் பிரதர்ஸ்’ என பத்திரிகைகள் வேடிக்கையாகச் சொல்லும் அளவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணியும் பி.தங்கமணியும் இணை பிரியாமல் இருந்தவர்கள். என்ன காரணமோ தெரியவில்லை, அண்மைக்காலமாக இருவரையும் ஒன்றாக பார்க்க முடிவதில்லை. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முக்கிய முடிவுகளை எடுத்து அறிவிக்கும் போது கூட தங்கமணி தலையை பார்க்கமுடிவதில்லை.
என்னதான் ஆச்சு தங்கமணிக்கு? பாஜக-வுடன் கூட்டணி இல்லவே இல்லை என்று பழனிசாமி சொல்லி வந்தாலும், “நமக்கு பாதுகாப்பே பாஜக தான். பாஜக கூட்டணி தான் சரிப்பட்டு வரும்” எனச் சொல்லி வந்தார் தங்கமணி என்பார்கள். பழனிசாமிக்கு ஒருவகையில் சம்பந்தி முறை என்பதால் மற்றவர்களைக் காட்டிலும் கட்சி விவகாரங்கள் தங்கமணிக்கு கொஞ்சம் கூடுதலாகவே தெரியும். இருந்த போதும், பாஜக கூட்டணி விவகாரத்தில் தங்கமணியின் பேச்சும் பழனிசாமியிடம் எடுபடவில்லை. இதனால், அவராகவே கட்சி நடவடிக்கைகளை விட்டு கொஞ்சம் ஒதுங்கி இருந்தார்.