ஐதராபாத்,
ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டம் திருவூரை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். காஞ்சிகசெர்லா அடுத்த பரிதலாவில் உள்ள தனியார் விடுதியில் தங்கி அங்குள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். அப்போது பரிதலாவை சேர்ந்த ஷேக் உசேன் (வயது 25) என்ற வாலிபருடன் மாணவிக்கு நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது.
இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்தனர். இந்தநிலையில், ஷேக் உசேன் தன்னுடைய வீட்டில் சுப நிகழ்ச்சி நடப்பதாகவும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டுமென மாணவிக்கு தெரிவித்தார். இதனை உண்மை என நம்பிய மாணவி ஷேக் உசேன் வீட்டிற்கு சென்றார். ஆனால் அவரது வீட்டில் எந்தவித சுப நிகழ்ச்சியும் நடக்கவில்லை. மாறாக ஷேக் உசேன் வீட்டில் மாணவியுடன் படிக்கும் சிந்தலா பிரபுதாஸ் (வயது 25) ஓவியர் ஷேக் கலி சைதா (வயது 26) ஆகியோர் இருந்தனர். வீட்டில் எந்தவித நிகழ்ழ்சியும் நடக்கவில்லையே என மாணவி கேட்டபோது அவரை ஒரு அறைக்குள் தள்ளி 3 பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். மாணவியின் சத்தம் வெளியே கேட்காமல் இருப்பதற்காக டி.வியில் சத்தத்தை அதிகமாக வைத்து இருந்தனர்.
பின்னர் அவர்களிடம் இருந்து மீண்டு வந்த மாணவி இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷேக் உசேன், சிந்தலா பிரபு தாஸ் மற்றும் ஷேக் கலி சைதா ஆகியோரை கைது செய்தனர்.