என்எல்சி தொழிலாளர்களுக்கு என்ஓசி வழங்கியதில் முறைகேடு விசாரணைக்கு பயந்து எலிபேஸ்ட் சாப்பிட்டதாக நாடகமாடிய ஏட்டு கைது

3 months ago 15

*மேலும் 2 போலீசார் சஸ்பெண்ட்

மங்கலம்பேட்டை : என்எல்சி தொழிலாளர்களுக்கு என்ஓசி வழங்கியதில் முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு பயந்து ஏட்டு எலிபேஸ்ட் சாப்பிட்டதாக நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஏட்டு உள்பட 3 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதில் ஏட்டு சுதாகர் கைது செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்டம், ஊமங்கலம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் சுதாகர். இவர் கடந்த 1993ம் ஆண்டு முதல் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். என்எல்சியில் பணிபுரியும் ஒவ்வொரு ஒப்பந்த தொழிலாளரும் ஆண்டுதோறும் அவர்கள் பகுதியில் உள்ள காவல் நிலையங்களுக்கு சென்று எந்த வழக்கும் இல்லை என்று என்ஓசி பெற்று பணி இடத்தில் கொடுக்க வேண்டும்.

அந்த வகையில் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் சிலருக்கு சான்றிதழ் வழங்கியதில் ஊமங்கலம் தலைமை காவலர் சுதாகர், எழுத்தர் ஜோசப், எஸ்பி தனிப்பிரிவு ஏட்டு சங்குபாலன் ஆகியோர் ஆவணங்களை திருத்தி முறைகேடு செய்து சான்றிதழ் வழங்கியதாக கூறப்படுகிறது.இது தொடர்பாக ஏட்டு சுதாகர் உள்ளிட்ட 3 பேர் மீதும் துறைரீதியான விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்காக ஏட்டு சுதாகர் கடந்த 11ம் தேதி நெய்வேலி டிஎஸ்பி சபியுல்லாவை சந்திக்க டிஎஸ்பி அலுவலகத்துக்கு சென்றுள்ளார். பின்னர் டிஎஸ்பியை சந்திக்கும் போது, தான் எலிபேஸ்ட் சாப்பிட்டு விட்டதாக கூறி உள்ளார்.

இதைதொடர்ந்து அங்குள்ள போலீசார் அவரை நெய்வேலி பொதுமருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.இதற்கிடையே ஆவணங்கள் முறைகேடு புகாரில் உயர் அதிகாரியின் விசாரணைக்கு பயந்து ஏட்டு சுதாகர் எலி பேஸ்ட் சாப்பிட்டதாக நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சுதாகர் மற்றும் எஸ்பி தனிப்பிரிவு ஏட்டு சங்குபாலன், காவல்நிலைய எழுத்தர் ஜோசப் ஆகிய 3 பேரையும் நெய்வேலி டிஎஸ்பி சபியுல்லா பரிந்துரையின் பேரில், கடலூர் எஸ்பி ராஜாராம் நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் ஏட்டு சுதாகரை போலீசார் கைது செய்துள்ளனர்.

The post என்எல்சி தொழிலாளர்களுக்கு என்ஓசி வழங்கியதில் முறைகேடு விசாரணைக்கு பயந்து எலிபேஸ்ட் சாப்பிட்டதாக நாடகமாடிய ஏட்டு கைது appeared first on Dinakaran.

Read Entire Article