நெய்வேலி: நெய்வேலியில் நேற்று நடந்த என்எல்சி தொழிலாளர் ரகசிய வாக்கெடுப்பு தேர்தலில் திமுகவின் தொழிற்சங்க பிரிவான தொமுச அதிக வாக்குகள் பெற்று முதன்மை சங்கமாக வெற்றிபெற்றது. கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்திய நிறுவனம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் தொழிற்சங்க அங்கீகாரத்-துக்கான ரகசிய வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது.
என்எல்சியில் மொத்தமுள்ள 6,800 தொழிலாளர்கள் வாக்களிக்கும் இந்த தேர்தலில் 6 தொழிற்-சங்கங்கள் போட்டியிட்டன. நேற்று என்எல்சியில் சுரங்க அலுவலகம், நிர்வாக அலுவலகம், அனல்மின் நிலைய அலுவலகம் உள்ளிட்ட 11 இடங்களில் மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது. காலை 5.30 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் துணையுடன் மின்னணு வாக்குப் பெட்டிகள் வட்டம் 9ல் உள்ள என்எல்சி நடுநிலைப்பள்ளியில் வைக்கப்பட்டு இரவு 9 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி துவங்கியது.
இந்நிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று நள்ளிரவில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்த வாக்குகள் 6,578. பதிவான வாக்குகள் 6,364. இதில் தொமுச 2,507 வாக்குகளும், அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம் 1,389 வாக்குகளும், பாட்டாளி தொழிற்சங்கம் 1,385 வாக்குகளும், சிஐடியு 794 வாக்குகளும், திராவிட தொழிலாளர் ஊழியர் சங்கம் 231 வாக்குகளும், பாரதிய மஸ்தூர் சங்கம் 58 வாக்குகளும் பெற்றன. அதன்படி அங்கீகரிக்கப்பட்ட முதன்மை தொழிற்-சங்கமாக திமுகவும், இரண்டாம் இடத்தில் அதிமுக தொழிற்சங்கமும் தேர்ந்தெடுக்கப்பட்டது.
The post என்எல்சி தொழிற்சங்க அங்கீகார தேர்தல்: தொமுச அமோக வெற்றி appeared first on Dinakaran.