புதுச்சேரி, அக். 5: புதுச்சேரியில் பாஜகவுக்கு போட்டியாக உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த என்ஆர் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் திடீரென ஆலோசனை நடத்தி உள்ளனர். இதில் என்ஆர் காங்கிரசை பலப்படுத்த அதிரடி திட்டங்களை வகுத்துள்ளதாக தெரிகிறது புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் தேஜ கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. என்ஆர் காங்கிரஸ், பாஜகவைச் சேர்ந்தவர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சி சார்பில் வேட்பாளராக களமிறங்கிய பாஜக அமைச்சரான நமச்சிவாயம் படுதோல்வி அடைந்தார்.
அதன்பிறகு 2 கட்சிகளுக்கு இடையே உரசல் ஏற்பட்டது. ஆளுங்கட்சிக்கு ஆதரவளித்த எம்எல்ஏக்களில் சிலர் போர்க்கொடி தூக்கிய நிலையில் அக்கட்சி தலைமை சமாதானப்படுத்தியது. இதனிடையே கடந்த மாதம் பாஜக மாநில தலைமையானது கட்சியில் புதிய உறுப்பினர் சேர்க்கையை துவங்கியது. சுமார் 2 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கையை இலக்காக வைத்து 30 சட்டசபை தொகுதிகள் வாரியாக நிர்வாகிகளை நியமித்து பணிகளை மேற்கொண்டனர். இருப்பினும் அக்கட்சி எதிர்பார்த்தளவு சேர்க்கை நடைபெறாததால் சோகத்தில் உள்ளனர்.
இதனிடையே பாஜகவுக்கு போட்டியாக, தனது கட்சியை பலப்படுத்த என்ஆர் காங்கிரஸ் அதிரடியாக முடிவு செய்துள்ளது. இதற்காக அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகள் களம் இறங்கியுள்ளனர். அதாவது கட்சியின் செயலாளர் ஜெயபால், மூத்த நிர்வாகியும், முன்னாள் சபாநாயகருமான சபாபதி தலைமையில் நேற்று என்ஆர் காங்கிரஸ் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முன்னணி நிர்வாகிகள் இசிஆரில் உள்ள தங்களது கட்சி தலைமை அலுவலகத்தில் ஒன்றுகூடி திடீரென ஆலோசனை நடத்தினர்.
புதிய உறுப்பினர்களை எப்படி சேர்ப்பது, இதற்கான ெபாறுப்புகளில் யார், யாரை நியமிப்பது என்பது குறித்து ஆலோசித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி என்ஆர் காங்கிரஸ் எனும் புதிய கட்சித் தொடங்கியதில் இருந்து தொகுதி வாரியாக நிர்வாகிகளை ரங்கசாமி இதுவரை நியமிக்காத நிலையில் கட்சிகளில் சிலருக்கு பொறுப்பு தரவும் முடிவு எடுத்துள்ளனர். இதனால் கூட்டணி கட்சியான பாஜக அதிர்ச்சியில் இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன.
The post என்ஆர் காங். மூத்த நிர்வாகிகள் திடீர் ஆலோசனை appeared first on Dinakaran.