
கவுகாத்தி,
அசாமில் உள்ள 27 மாவட்டங்களில், கடந்த 2 மற்றும் 7 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக பஞ்சாயத்து தேர்தல் நடந்து முடிந்தது. இந்நிலையில், அசாமின் கவுகாத்தி நகரில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில், முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று பேசினார்.
அவர் பேசும்போது, பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், 2025-ம் ஆண்டுக்கான அசாம் பஞ்சாயத்து தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெருவாரியான வெற்றியை பெற்றுள்ளது. இந்த தேர்தலில், ஆளும் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியான அசோம் கன பரிஷத் ஆகிய இரு கட்சிகளும் மொத்தமுள்ள 397 ஜில்லா பரிஷத் இடங்களில் 300 இடங்களை கைப்பற்றி உள்ளது.
இதேபோன்று, மொத்தமுள்ள 2,192 பஞ்சாயத்துக்கான இடங்களில் 1,436 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி, ஜில்லா பரிஷத் தேர்தலில் 76.22 சதவீத வாக்குகளையும், பஞ்சாயத்துக்கான இடங்களில் 66 சதவீத வாக்குகளையும் கைப்பற்றி உள்ளன என கூறினார்.
இந்த பிரசாரத்தில் ஈடு இணையற்ற ஆதரவு தெரிவித்ததற்காக, பா.ஜ.க. தலைவர் நட்டடா, மத்திய மந்திரி அமித்ஷா, சர்பானந்தா சோனோவால் ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்து கொண்டார்.