
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த, தற்போதைய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் திரிபுவாத செயல்களுக்கும், உண்மைகளை மறைத்து சரித்திரப் பதிவேடுகளை திருத்தும் அடாவடித் தனங்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்க கார்ப்பரேஷன் தொழிலாளர்கள் சங்க அங்கீகாரத்திற்கான தேர்தல் நாளை (25.4.2025) நடைபெற உள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தத் தேர்தலில், தற்போது அங்கீகாரம் பெற்று என்.எல்.சி. ஊழியர்களின் நலனுக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வரும் அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம் மீண்டும் அங்கீகாரம் பெறுவதற்காகப் போட்டியிடுகிறது. நம்முடைய தொழிற்சங்கத்தை எதிர்த்து வேறு சில இயக்கங்களும் போட்டியிடுகின்றன. அதில் தி.மு.க.வின் தொ.மு.ச-வும் ஒன்றாகும்.
தொ.மு.ச-விற்கு வாக்கு கேட்டு தி.மு.க. தலைவர் என்ற முறையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், நமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், வழக்கம்போல் பொய்களை விதைத்தே தொழிலாளர்களிடம் வாக்கு கேட்பது, இந்த ஏமாற்று மாடல் கட்சியின் வாடிக்கையான செயலை தோலுரித்துக் காட்ட வேண்டிய கட்டாயம் நமக்குள்ளது.
"மத்திய அரசுகள் என்.எல்.சி. பங்குகளை விற்று தனியார் மயத்தைப் புகுத்த முயற்சித்த நேரத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாக, அது தடுக்கப்பட்டு இன்றளவும் இந்தியாவிலேயே அதிக ஊதியம் பெறக்கூடிய தொழிலாளர்கள் பணியாற்றக்கூடிய பொதுத் துறை நிறுவனமாக என்.எல்.சி நிறுவனம் விளங்குகிறது" என்ற ஒரு தார்பாயில் வடிகட்டிய புளுகு மூட்டையை ஸ்டாலின் அவிழ்த்து விட்டிருக்கிறார்.
என்.எல்.சி. தொழிலாளர்கள் ஒன்றும் தெரியாதவர்கள் என்று இந்த தி.மு.க.வின் பொம்மை முதல்-அமைச்சர் ஸ்டாலின் நினைக்கிறார்போல் தெரிகிறது.
2007-ம் ஆண்டு காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சியில், என்.எல்.சி. பங்குகளை விற்க முனைந்தபோது, ஜெயலலிதா எதிர்கட்சித்தலைவராக உடனடியாக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு என்.எல்.சி. பங்குகளை தனியாருக்கு விற்கக்கூடாது என்றும், அவ்வாறு விற்க முனைந்தால் என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து நெய்வேலியில் தனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் எச்சரித்து கடிதம் எழுதினார்.
2013-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில், அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ்-தி.மு.க. அரசு, என்.எல்.சி-யின் பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு செய்தபோது, 27.8.2013 முதல் 13 நாட்கள் என்.எல்.சி. தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினார்கள். தொடர்ந்து, ஜெயலலிதா என்.எல்.சி-யின் பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவினை எதிர்த்து, மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதினார். கடிதம் எழுதியதுடன், அன்றைய மத்திய அரசை வலியுறுத்தி என்.எல்.சி-யின் 5 சதவீத பங்குகளை தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான தமிழக அரசு தொழில் முன்னேற்றக் கழகம் மூலம் வாங்கினார். இதனைத் தொடர்ந்து, என்.எல்.சி. நிறுவனத் தொழிலாளர்கள் தங்களது வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றனர். என்.எல்.சி. நிறுவனம் தனியார் வசம் ஆகாமல் ஜெயலலிதா தடுத்து நிறுத்திய காரணத்தினால்தான் இன்றைக்கும் அதன் ஊழியர்கள் இந்தியாவிலேயே எந்த பொதுத்துறை நிறுவனத்திலும் இல்லாதவாறு சிறப்பான ஊதியம் பெறுகிறார்கள்.
காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது - என்ற வள்ளுவர் வாக்கின் அர்த்தம் தெரிந்த என்.எல்.சி. தொழிலாளர்கள், அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கத்திற்கு கடந்த தேர்தலில் அங்கீகாரம் வழங்கினார்கள். மத்தியில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அரசு என்.எல்.சி. பங்குகளை தனியாருக்கு விற்க முற்பட்டபோது, தி.மு.க. அதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போடாமல் கைகட்டி வேடிக்கை பார்த்ததுதான் நிதர்சனம். மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியோ, அவரது மகன் என்ற முறையில் இன்றைக்கு தலைவராக இருக்கக்கூடிய மு.க. ஸ்டாலினோ இந்தப் பங்கு விற்பனையை எதிர்த்து, மத்திய அரசைக் கண்டித்து அறிக்கை ஏதாவது வெளியிட்டிருந்தால், அதை நாளைய வாக்குப் பதிவிற்கு முன்பு, பொது வெளியில் வைக்க தி.மு.க. தயாரா?
ஏய்த்துப் பிழைக்கும் தொழிலையே மூலதனமாகக் கொண்டு அரசியல் நடத்தும் நிர்வாகத் திறனற்ற மு.க. ஸ்டாலினின் பசப்பு வார்த்தைகளிலும், அவர் ஆட்டும் கிளுகிளுப்பை சத்தங்களுக்கும் செவி சாய்க்காமல் என்.எல்.சி. தோழர்கள் அவர்களுக்கு என்றென்றும் பாதுகாப்பு அரணாக நிற்கும் அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கத்தை எண். 3-ல் வாக்களித்து தனிப்பெரும் சங்கமாக தேர்வு செய்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.