
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆன ஷிகர் தவான் கடந்த ஆண்டு சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்றார். இந்திய அணிக்காக கடந்த 2010ம் ஆண்டு அறிமுகம் ஆன அவர், 34 டெஸ்ட், 167 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். மேலும், 222 ஐ.பி.எல் போட்டிகளிலும் ஆடி உள்ளார்.
மிகச்சிறந்த தொடக்க வீரராக செயல்பட்ட ஷிகர் தவான் இந்திய அணிக்காக பல வெற்றிகளில் முக்கிய பங்காற்றி உள்ளார். இவர் 2013ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார்.
கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த விளங்கிய ஷிகர் தவானுக்கு தனிப்பட்ட வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. தவான், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆயிஷா முகர்ஜி என்பவரை காதலித்து 2012-ம் ஆண்டில் கரம் பிடித்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2023-ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர்.
இதற்கிடையே ஷிகர் தவான் அபுதாபியில் பணியாற்றும் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த சோபி ஷைன் என்ற பெண்ணை காதலிப்பதாக சமீபத்தில் தகவல்கள் கசிந்தன. இருவரும் ஒன்றாக சுற்றும் புகைப்படங்களும் இணையதளத்தில் வைரலானது.
இந்த நிலையில் ஷிகர் தவான், சோபி ஷைனுடனான நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'என் அன்பே' என்ற தலைப்புடன் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.