![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/25/35720161-4.webp)
சென்னை,
விஷால் மற்றும் சந்தானம் நடிப்பில் வெளியான திரைப்படம் 'மதகஜராஜா'. இந்த படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்கியுள்ளார். வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு உருவான இப்படம் 12 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு கடந்த 12-ந் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது.
நடிகர்கள் விஷால், சந்தானம், மனோபாலா ஆகியோரின் நகைச்சுவைக் காட்சிகள் பெரிதாகக் கவனம் பெற்றதால் படம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. மேலும், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரூ.15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 10 நாட்களில் ரூ.50 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழில் வரவேற்பை பெற்ற இப்படம் தற்போது தெலுங்கு மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. தெலுங்கில் இப்படம் வருகிற 31-ந் தேதி வெளியாக உள்ளது.
'மதகஜராஜா' திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டமும் நன்றி தெரிவிக்கும் விழாவும் கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது.
இந்நிலையில் மீண்டும் நன்றி தெரிவித்து நடிகர் விஷால் பதிவு ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "12 வருடங்கள் பழைய படமாக இருந்தாலும் 'மதகஜராஜா' திரையரங்குகளில் நன்றாக ஓடி வருகிறது. படம் வெளியாகி இரண்டு வாரங்களாகி விட்டாலும் இன்னும் 75 சதவீத திரையரங்குகளில் 'மதகஜராஜா' ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் தற்போது 375 காட்சிகள் தற்போதும் வெற்றிகரமாக ஓடி வருகிறது. கடவுளின் ஆசிர்வாதத்தால்தான் இந்த அற்புதம் நிகழ்ந்துள்ளது. திரையரங்க உரிமையாளர்கள் என்னிடம் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.வார நாட்களிலும் குழந்தைகளுடன் குடும்பங்கள் காட்சிகளுக்கு வருவதாக கூறினர். இதுதான் உண்மையான வெற்றி.
எனது திரை வாழ்க்கையிலேயே இந்த படம்தான் சிறந்த படமாகும். இயக்குநர் சுந்தர் சி மீண்டுமொரு முறை கமர்ஷியல் கிங் என்பதை நிருபித்துள்ளார். ஒட்டுமொத்த தமிழ் திரையுலகின் வெற்றியாக 2025ம் ஆண்டு தொடங்கியுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.