மும்பை: எனது அரசியல் வழிகாட்டி ஜார்ஜ் பெர்னாண்டஸ் என்றும், தனது சிறுநீரை உரமாக்கியதாக பாஜக அமைச்சர் கட்கரி கூறிய வெளிப்படையான பேட்டியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
பாஜக மூத்த தலைவரும், ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சருமான நிதின் கட்கரி, தனது அரசியல் பயணத்தையும், தனிப்பட்ட கொள்கைகளையும் பற்றி வெளிப்படையாகப் பேசக்கூடியவர் ஆவார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ‘நான் கட்சியின் அடிமட்டத் தொண்டன். எனக்கு அரசியல் என்பது சமூக-பொருளாதார சீர்திருத்தத்திற்கான கருவி மட்டுமே. நான் 90% சமூகப் பணியும், 10% அரசியலும்தான் செய்கிறேன். 12ம் வகுப்பில் 52% மதிப்பெண்கள் பெற்று, பொறியியல் படிப்பில் சேரத் தகுதி பெறாத மாணவர். இன்று 13 கவுரவ டாக்டர் பட்டங்கள் பெற்றிருந்தாலும், எனது வெற்றிக்கு எனது தாயே காரணம். எனது அரசியல் வழிகாட்டி ஜார்ஜ் பெர்னாண்டஸ்; கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஏ.பி.பரதன் முதல் காங்கிரஸ் மற்றும் சோசலிச இயக்கங்களின் தலைவர்களிடம் உத்வேகத்தை கற்றுக் கொண்டேன்.
ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, அவர்களது (தலைவர்கள்) கோரிக்கை நியாயமானதாக இருந்தால் அவர்களுக்கு உதவ முயற்சிப்பேன். அமைச்சர்கள் ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தமானவர்கள் அல்ல; அவர்கள் நாட்டிற்கே சொந்தமானவர்கள் என்று வாஜ்பாய் எங்களுக்குக் கற்றுக் கொடுத்துள்ளார். சுங்கச்சாவடிக் கட்டணங்கள் குறித்து சமூக ஊடகங்களில் வரும் கேலி, கிண்டல்களையும் பார்க்கிறேன். மக்களின் கோபம் நியாயமானதுதான் என்றாலும், உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு சுங்கக் கட்டணங்கள் அவசியம். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது முக்கியது. நான் ஒருமுறை எனது சிறுநீரை 72 லிட்டர் அளவிற்கு பிடித்து வைத்து, அதனை எனது வீட்டு தோட்டக்காரரிடம் கொடுத்தேன். அவர் அதனை இயற்கை உரமாக விவசாயத்திற்கு பயன்படுத்திக் கொண்டார்’ என்றார். இவரது இந்த வெளிப்படையான பதில்கள், அவரது பன்முகத்தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
The post எனது அரசியல் வழிகாட்டி ஜார்ஜ் பெர்னாண்டஸ்; சிறுநீரை உரமாக்கிய ஒன்றிய பாஜக அமைச்சர்: வெளிப்படையான பேட்டிக்கு பாராட்டு appeared first on Dinakaran.