சென்னை,
பிரபல தெலுங்கு இயக்குனர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தண்டேல். நாக சைதன்யாவின் கெரியரில் அதிக பொருட்செலவில் உருவாகி இருக்கும் இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார்.
கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் அல்லு அரவிந்த் மற்றும் பன்னி தாஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம், வருகிற 7-ம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் அர்ஜுன் ரெட்டி, அனிமல் பட இயக்குனர் சந்தீப் ரெட்டி கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் அவர் பேசும்போது, "அர்ஜுன் ரெட்டி படத்தில் நடிக்க முதலில் சாய் பல்லவியைதான் தேர்ந்தெடுத்தேன். அதற்காக அவரது மேனேஜரிடம் பேசும்போது, சாய்பல்லவி ஸ்லீவ்லெஸ் அணிந்து நடிக்க மாட்டார் என்று கூறினார். இதனால், அதனை கைவிட்டேன்" என்றார்
அதனை தொடர்ந்து பேசிய சாய் பல்லவி, 'எனக்கு மேனேஜர் என்று யாருமே இல்லை. என் மேனேஜர் என கூறி உங்களை யார் ஏமாற்றியது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அர்ஜுன் ரெட்டி படத்தில் ஷாலினி பாண்டே, விஜய் தேவரகொண்டா இருவருமே அற்புதமாக நடித்திருந்தார்கள். அர்ஜுன் ரெட்டி மூலம் பாலிவுட்டிற்கும் சென்று வெற்றி பெற்ற உங்களின் அடுத்த படத்தை எல்லோருமே ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்" என்று கூறினார்.