
சென்னை,
ராம் சரண், ஜுனியர் என்.டி.ஆர், ஆலியா பட் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். இப்படம் ரூ.1,230 கோடிக்கு மேல் வசூலித்தது. எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய இப்படத்தில் வரும் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருது வென்றது.
இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகை மின்னி டிரைவர், ஆர்.ஆர்.ஆர் படத்தை பாராட்டி பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'ஆர்.ஆர்.ஆர் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. இதை 3 மாதங்களுக்கு ஒரு முறை என் மகனுடன் பார்ப்பேன். என் மகனுடன் படத்தை பார்க்க எனக்கு மிகவும் பிடிக்கும். எல்லா காலத்திலும் எங்களுக்கு பிடித்த படம் இது. இதுவரை எடுக்கப்பட்ட படங்களில் மிக அழகான படங்களில் இதுவும் ஒன்று என்று நான் நினைக்கிறேன்' என்றார்.
நடிகை மின்னி டிரைவர் சமீபத்தில் வெளியான 'தி செர்பன்ட் குயின் சீசன் 2'-வில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.