
ஜெய்ப்பூர்,
ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு அரங்கேறிய 47-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 209 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 84 ரன்களும், பட்லர் 50 ரன்களும் அடித்தனர்.
பின்னர் 210 ரன் இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி 15.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 212 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி 101 ரன்களும், ஜெய்ஸ்வால் 70 ரன்களும் அடித்தனர். வைபவ் சூர்யவன்ஷி ஆட்டநாயகன் விருது வென்றார்.
இந்நிலையில் இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற வைபவ் சூர்யவன்ஷி அளித்த பேட்டியில், "இது மிகவும் நல்ல உணர்வு. இது ஐ.பி.எல்.-லில் எனது முதல் சதம். அதுவும் எனது மூன்றாவது இன்னிங்சிலேயே வந்தது சிறப்பானது. இந்த போட்டிக்கு முந்தைய என்னுடய பயிற்சியின் விளைவு இங்கே காட்டப்பட்டுள்ளது. நான் பந்தைப் பார்த்து விளையாடுகிறேன்.
ஜெய்ஸ்வாலுடன் பேட்டிங் செய்வது நல்லது. அவர் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குச் சொல்கிறார். மேலும் அவர் நேர்மறையான விஷயங்களை எனக்குள் செலுத்துகிறார். ஐ.பி.எல்.-லில் 100 ரன்கள் எடுப்பது கனவாக இருந்தது. இன்று அது நிறைவேறியுள்ளது. எனக்கு பயம் கிடையாது. நான் அதிகம் யோசிக்கவில்லை. நான் விளையாடுவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன்" என்று கூறினார்.