
சென்னை,
நாம்ழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்துக்கொள்வதாக கூறி, பாலுறவு வைத்து ஏமாற்றியதாக வளசரவாக்கம் போலீசில் நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு புகார் செய்தார். அதன் அடிப்படையில் சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை ஐகோர்ட்டில் சீமான் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இந்த வழக்கை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. விஜயலட்சுமி புகாரை திரும்பப் பெற்றாலும்கூட பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதால், வழக்கை ரத்துசெய்ய முடியாது. இந்த வழக்கில் போலீசார் 12 வார காலத்துக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, சீமான் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்தார்.
ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து, சீமான் சார்பில் வக்கீல் நிர்னிமேஷ் துபே சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீடு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.
சீமான் சார்பில் மூத்த வக்கீல் கோபால் சங்கரநாராயணன் ஆஜராகி, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புகளையும், மேல்முறையீடு மனுவின் கோரிக்கைகளையும் சுட்டிக்காட்டி, 12 வாரங்களுக்குள் புலன்விசாரணையை நடத்தி முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள், புகார்தாரான பெண்ணுக்கு தொல்லை அளிக்கப்பட்டுள்ளது. புலன்விசாரணை தொடரட்டும் எனக் குறிப்பிட்டபோது, மூத்த வக்கீல் கோபால் சங்கரநாராயணன் 12 ஆண்டுகள் கழித்து புகார்தாரர் மீண்டும் அதே குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். புகாரை 3 முறை திரும்பப் பெற்றுள்ளதை சென்னை ஐகோர்ட்டு உத்தரவில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும், புலன்விசாரணை செய்ய வேண்டியது மாநில அரசின் கடமை என உத்தரவிட்டுள்ளது. இந்த புலன்விசாரணை அரசியல் உள்நோக்கம் கொண்டதாக தோன்றுகிறது என வாதிட்டார். அந்தப் பெண்ணுக்கு இழப்பீடு வழங்குங்கள் என நீதிபதிகள் தெரிவித்தபோது, மூத்த வக்கீல் கோபால் சங்கரநாராயணன், இழப்பீட்டை நோக்கிய நடவடிக்கைகள், இழப்பீடு தொடர்பாக முயற்சிகள் எங்கோ எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இது தொடர்பாக மனுதாரரிடம் கேட்டுத் தெரிவிப்பேன் என கூறினார்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள், 12 வாரங்களுக்குள் புலன்விசாரணை செய்ய வேண்டும் என்ற சென்னை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கிறோம். விசாரணையை மே 2-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம். 2 மாதங்களுக்குள் இந்த விவகாரத்துக்கு பேசி முடிவு காணட்டும் என்றும் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக புகார்தாரரும், தமிழ்நாடு அரசும் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இந்தநிலையில், இது குறித்து நடிகை வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பற்றி மக்களிடம் பேச விரும்புகிறேன். நேற்றைய தீர்ப்பின்படி செட்டில்மெண்ட் செய்ய கூறி உள்ளார்கள். இது பற்றி எனக்கு சீமான் ரூ.10 கோடி கொடுத்தார் என எழுத ஆரம்பித்து விடுவார்கள்.
சென்னை ஐகோர்ட்டில் எனது வழக்கை ரத்து செய்ய சொல்லி சீமான் வழக்கு தொடுத்தபோது காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் வாதாடினார்கள். அதனடிப்படையில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது. அதேபோல சுப்ரீம் கோர்ட்டில் சீமானின் மேல்முறையீடு செய்தபோது என் சார்பாக ஏன் யாரும் வாதாட முன் வரவில்லை. நான் சீமானிடம் பேசினால் காசுக்காக செய்கிறேன் என சொல்கிறீர்களே, நேற்று ஏன் என் சார்பாக யாரும் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகவில்லை. எனக்கு நீதியும், நியாயும் இந்த வழக்கில் கிடைக்காது என்பதை தெரிந்துகொண்டே. இதை தாண்டி நான் எந்த போராட்டமும் நான் செய்யபோவதில்லை. யாரும் சீமானுக்கு எதிராக பேசுவதில்லை. எனவே இதில் இனிமேல் போராடும் அவசியம் எனக்கு கிடையாது. இதுவரை மக்கள் எனக்கு கொடுத்த ஆதரவுக்கு நன்றி. இதுதான் எனது கடைசி வீடியோ என்றார்.