எந்நிலையிலும் மாறாத அன்பு

3 hours ago 2

சிலருக்கு நாம் அவசியம் இல்லை. ஆனால் நாம் செய்யும் உதவிகள் மட்டும் அவசியம். பசித்த வயிறு, பொய்யான உறவு, நம்பியவர் செய்த துரோகம், கடனுடன் வாழும் வாழ்க்கை இவை நான்கும் கற்பிக்கும் அனுபவப் பாடத்தை இந்த உலகில் யாராலும் கற்பிக்க முடியாது. ஒவ்வொரு இதயத்திலும் ஏதாவது ஒரு வலி இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதை பலர் கண்ணீரிலும், சிலர் புன்னகையிலும் மறைத்துக் கொள்கிறார்கள். வாழ்க்கையில் நீங்கள் தொலைத்த உறவுகளை தேடிச் செல்லுங்கள். விலகிச் சென்ற உறவுகளை நாடி தேடி தோற்றுவிடாதிருங்கள். மகிழ்ச்சி என்பது காசு பணத்தால் வருவது அல்ல. நம் மீது பாசம் காட்டவும், நமக்கு ஆறுதலாகவும், தவறுகளை சுட்டிக்காட்டவும், நம் இயலாமையில் உடனிருக்கவும் ஒரு உறவு கடைசி வரை கிடைக்குமானால் நமக்கு எப்போதும் மகிழ்ச்சிதான்.

சிலரை நாம் சிறந்த உறவுகள் என நம்பும் நேரத்தில், அவர்கள் ‘‘நாங்கள் சிறந்த நடிகர்கள்’’ என்று நிரூபித்து விடுகிறார்கள். சிலருக்கு நாம் அவசியம் இல்லை, ஆனால் நமது உதவிகள் மட்டும் அவசியம். இப்படியானோரை நாம் அதிகம் சந்திக்கக் கூடும். இது வெளிப்படையாகவே தெரிந்தாலும் நாம் அவர்களை வெறுப்பதில்லை. ஏனெனில் நாம் இன்ன செய்தோருக்கும் நன்மை செய்வதையே விரும்புகின்றோம். இன்று உண்மையான அன்பை அவர்கள் அலட்சியம் செய்யலாம். ஆனால், ஒரு நாள் அதே அன்பு கிடைக்காதா என்று ஏங்கித்தான் நிற்கப் போகிறார்கள். தேடிப்போய் பேசுனா பொய் . விட்டுக் கொடுத்து போனா பொய். வெறுத்து ஒதுக்கும் இடத்தில் அன்பு காட்டினால் பொய். இனிக்க இனிக்க பேசினால் உண்மை என்று நம்புகிறது உலகம்.

உறவுகளுக்கிடையில் இருக்கும் அன்பும் ஐக்கியமும் நெருக்கத்தின் நாட்களிலே சோதித்தறியப்படும். வாழ்க்கையிலே எல்லாம் நிறைவாயும் உயர்வாகவும் இருக்கும்போது மனிதர்களின் ஐக்கியமும் அன்பும் உறுதியாயிருப்பது போல் தோன்றும். ஆனால் குறைவும், தாழ்வும் ஏற்படும்போது அன்பு என்ற பதத்தின் உண்மை நிலையானதாக வெளிப்பட வேண்டும். உபத்திரவம் மிகுதியினால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும் என்பது உண்மை. ஆனால், தேவனிலே நிலைத்திருக்கின்றவர்கள் நாளுக்கு நாள் தேவ அன்பிலே வளர்ந்து பெருக வேண்டும். இவ்வுலகத்தினால் அன்பு சூழ்நிலைகளுக்கேற்ப மாறிவிடுகிறது. கடைசி காலங்களிலே, மனிதர்கள் நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும் இருப்பார்கள் என்று வேதம் கூறுகின்றது. இவர்கள் தேவ பக்தியுள்ளவர்கள் அல்ல. மாறாக தேவ பக்தியின் வேஷத்தை தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்கள். எனவே உங்களின் அன்பு சூழ்நிலைகளோடு மாறிப் போகுமானால் உங்கள் வாழ்க்கையை நீங்களே நிதானித்தறிந்து கொள்ளுங்கள். நாம் இயேசுவின் சாயலிலே வளருகின்றவர்களாக இருந்தால், அவருடைய அன்பிலே நாம் நிலைத் திருக்கின்றவர்களாகவும் இருப்போம்.
– அருள்முனைவர்:
பெ.பெவிஸ்டன்.

The post எந்நிலையிலும் மாறாத அன்பு appeared first on Dinakaran.

Read Entire Article