எந்தப் பதவியைக் கேட்க வேண்டும்?

1 week ago 4

பராசர பட்டர் மிகச்சிறந்த வைணவ அறிஞர். நுட்பமான விளக்கங்களை திருவாய்மொழிக்குத் தந்தவர். அவர் சொல்வார் ‘‘இறைவனிடத்திலே நல்ல ஞானத்தையும் அசஞ்சலமான பக்தி போன்ற விஷயங் களையும் பிரார்த்திக்காமல் பதவி, செல்வம் இவற்றையெல்லாம் கேட்கிறார்களே, என்ன வியப்பு?” என்பார். ஏன் பதவி, செல்வம் இவற்றையெல்லாம் இறைவனிடம் கேட்கக் கூடாதா என்ற கேள்வி வரும். அதற்கு என்ன விளக்கம் தெரியுமா? ஒருவருக்கு பதவி வருகின்ற பொழுது அந்தப் பதவியின் நிலைக்குத் தகுந்த ஆணவமும் அகங்காரமும் அவர் அறியாமலேயே அவரிடம் ஒட்டிக் கொள்ளும்.

இரண்டு நண்பர்கள். ஒரே நிலையில் இருந்தவர்களில் ஒருவருக்கு தலைமைப் பதவி கிடைத்து விட்டது.அவருடைய பேச்சு மாறிவிட்டது. இன்னொரு நண்பர் கேட்டார் .‘‘என்ன இப்பொழுதெல்லாம் உங்கள் நண்பர் முன்போல் பேசுவதில்லையே அப்படியே ஆள் மாறிவிட்டார்.’’அதற்கு இந்த நண்பர் சொன்னார் “அவர் மாறவில்லை ஐயா. அந்தப் பதவி அவரை மாற்றிவிட்டது. அந்தப் பதவி போய்விட்டால் பழைய இடத்துக்கு வந்து விடுவார்.’’உண்மைதான். சில ஆண்டுகள் கழித்து அந்தப் பதவி போய்விட்டது. மிக எளிமையாக மாறிவிட்டார். ஆனால், அந்தப் பதவி இருந்த காலம் வரை அவர் செய்த பல செயல்கள் அவருக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தித் தந்துவிட்டது. இதைத்தான் பராசர பட்டர் சொல்வார் ‘‘இந்திரனுக்கும் வேறு தேவர்களுக்கும் அந்தந்த பதவிக்குத் தகுந்த ஆணவம் இருப்பதால் அவர்கள் தவ வலிமையால் குறிப்பிட்ட பதவியை அடையலாமே தவிர, இறைவனுடைய பேரருளோ மோட்சமோ அவர்களுக்குக் கிடைப்பது சாத்தியமல்ல.” என்பார்.நீங்கள் ஒரு அரசனாகக் கூட இருக்கலாம். அந்த நேரத்தில் உங்களுக்கு மிகச்சிறந்த மரியாதைகள் கிடைக்கலாம். ஆனால் அது அப்படியே இருக்கும் என்று சொல்ல முடியாதல்லவா?’’ திருவாய்மொழியில் ஒரு அற்புதமான பாசுரம்.

ஒருநாயகமாய் ஓட, வுலகுட னாண்டவர்,கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்,பெருநாடு காண இம்மையிலேபிச்சை தாம்கொள்வர்,திருநாரணன்தாள் காலம் பெறச்சிந்தித் துய்ம்மினோ.ஒரு ராஜா இருந்தான். அவனை பூ மண்டலச் சக்கரவர்த்தி என்று எல்லோரும் புகழ்ந்தார்கள். அவ்வளவு செல்வாக்குடன் இருந்தான். மற்ற சிற்றரசர்கள் எல்லாம் திரைப்பணம் எடுத்துக் கொண்டு வந்து அவன் காலடியில் வைப்பார்கள். பொன்னும் மணியும் இழைத்த ஆபரணங்களால் பூட்டப்பட்ட அவனுடைய கால்கள் பீதாம்பரத்தால் மூடப்பட்டிருக்கும். தாம்பாளத்தில் கொண்டுபோய் தங்களுடைய சன்மானங்கள் வைத்து வணங்கும்பொழுது அந்தக் கால் விரல் நகமாவது தங்கள் கண்ணில் படாதா என்று காத்திருப்பார்கள். எத்தனைப் பெரிய பணக்காரர்களுக்கும் சில காலம் கழித்து தரித்திர யோகம் வந்துவிடும் என்று சாஸ்திரம் சொல்லுகின்றது. அதைப் போலவே இவனுக்கும் ஒரு கெட்ட நேரம் வந்தது. இவனை எப்படியாவது வீழ்த்தி விடவேண்டும் என்று நினைத்த பகை அரசர்கள் ஒன்றுகூடி, சற்று தளர்ச்சி பெற்று இருந்த நேரத்தில் படையெடுத்து நாட்டைக் கைப்பற்றி விட்டார்கள்.

அரசனோ உயிர் பிழைத்தால் போதும் என்று காட்டுக்கு ஓடி விட்டான். அன்று நல்ல அமாவாசை. சோர்ந்து போய் காட்டிலே அலைந்துகொண்டிருந்தான். பசி வயிற்றைக் கிள்ளியது. என்ன செய்வது என்று யோசித்தான். பசி வந்தால் பத்தும் பறந்து விடும் அதிலே மானமும் பறந்துவிடும். பிச்சை எடுத்தாவது தன்னுடைய வயிற்றை நிரப்பிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தான். அதேநேரத்தில் பகலில் போய் பிச்சை எடுத்தால் தன்னை யாராவது பார்த்து விடுவார்கள். எதிரிகள் பார்த்து விட்டால் உயிருக்கு ஆபத்தாகப் போய்விடும். தன்னுடைய நாட்டு மக்களே பார்த்து விட்டால் அரசன் இப்படிப் பிச்சைக்காரன் ஆகிவிட்டானே என்று நினைக்கத் தோன்றும். ஒரு பக்கம் உயிர் பயம். இன்னொரு பக்கம் மானம். இருட்டிய பிறகு போய் பிச்சை எடுத்துச் சாப்பிடலாம் என்று நினைத்தான்.அரண்மனையில் தங்கத் தாம்பாளத்தில் வகைவகையாகச் சாப்பிட்டவன் சோற்றுக்குத் தவித்தான். வாங்கிச் சாப்பிடுவதற்கு பாத்திரம் இல்லை. சுடுகாட்டில் யாரோ தூக்கிப் போட்ட, உடைந்த ஒரு சட்டிப் பானையை, கையில் எடுத்துக் கொண்டு இருட்டில் போய் பிச்சை எடுத்தான்.

அந்தக் காலத்தில் இரவில் யாராவது பிச்சை எடுத்தால் அவர்கள் பசியோடு உறங்கக் கூடாது என்பதற்காக உணவை வைத்திருக்கும் பழக்கம் உண்டு. இரவு கதவு சாத்துவதற்கு முன் ஒருமுறை வாசலில் யாராவது பிச்சைக்காரர்கள் இருக்கிறார்களா என்று பார்ப்பார்கள். அப்படிப் பார்க்கும்போது அரசன் இருட்டில் இருப்பதைக் கவனித்துக் கையில் வைத்திருந்த சட்டிப் பானையில் உணவைப் போட்டார்கள். அவர்களுக்குத் தெரியாது பிச்சை எடுப்பது தங்கள் நாட்டு அரசன்தான் என்று.நிம்மதியாக ஒரு இடத்தில் உட்கார்ந்து சாப்பிடலாம் என்று ஆவலுடன் கருப்பாக இருந்த ஒரு கல்லின் மீது அமர்ந்தான். ஆனால் அது கல் அல்ல. திடகாத்திரமாக இருந்த கரு நாய். கருவுற்ற நாய். இவன் உட்கார்ந்ததும் ஆங்கார மாகச் சிலிர்த்து எழுந்தது. இவனுடைய தொடைப்பகுதியில் இருந்த சதையைக் கவ்விப் பிய்த்து எறிந்தது. கையில் உள்ள சோற்றுச்சட்டி உடைந்து சோறு சிதறியது. வலியாலும் பசியாலும் அழுதான்.
இதைத்தான் இந்தப் பாசுரத்தின் முதல் இரண்டு வரிகளில் ‘‘ஒரு நாயகமாய் ஓட, உலகுடன் ஆண்டவர், கருநாய் கவர்ந்த காலர், சிதைகிய பானையர்” என மிக அற்புதமாகக் காட்சிப்படுத்துகிறார், நம்மாழ்வார்.பாசுரத்தின் பொருள் இதுதான்.

உலகங்களுக்கெல்லாம் ஓர் அரசனாக வீற்றிருந்து வாழ்ந்தவர்களும் கூட நாளடைவிலே தரித்ரர்களாய்த் தடுமாறும் நிலையைக் கண் கூடாகக் காணப்பெறலாம் என்பதால் நித்ய ஸ்ரீ மானான எம்பெருமானைப் பணிவதே பாங்கு.இப்பொழுது ஒரு கேள்வி எழும். அது என்ன பதவியோ செல்வமோ போய்விட்டால் யாரும் மதிக்காமல் போய் விடுவார்களா என்ன? இந்தக் கதை அதைத் தெளிவுபடுத்தும்,ஒரு தாசில்தார் ஆபீசின் பின்புறமுள்ள கிணற்றில் தவறி விழுந்து விட்டார்.அவரைக் காப்பாற்ற ஊழியர்கள் அனைவரும் போராடினார்கள்.ஒரே பரபரப்பு. ஒருவர் கயிறைக் கட்டி உள்ளே இறங்க முயற்சி செய்தார்.இன்னும் சிலர் சட்டைகளைக் கழற்றி முடிச்சுப் போட்டு கிணற்றுக்குள் விட்டு, ஐயா, இதைப் பிடித்துக் கொள்ளுங்கள்’’ என்று கத்தினார்கள். ஒவ்வொருவரும் தீவிரமாக தாசில்தாரைக் காப்பாற்ற முயற்சி செய்தார்கள்.

அந்த தாசில்தாரை பாதி அளவு மேலே தூக்கிக்கொண்டிருந்த சமயம் ,அந்தப் பக்கம் வந்த பியூன், இந்த ஆபீசருக்கு வேலை மாறுதல் ஆகிவிட்டது.புது தாசில்தார் வாசலுக்கு வந்துவிட்டார். என்று தகவல் சொன்னார்…அவ்வளவுதான். கிணற்றுக்குள் இருந்த தாசில்தாரை அப்படியே போட்டு விட்டு புது தாசில்தாரை வரவேற்க எல்லோரும் வாசலுக்கு ஓடிவிட்டார்கள்.அதிகாரம் மிக்க பதவிக்கு இருக்கும் மகிமை இதுதான்.இலட்சுமணனை, ‘‘காட்டுக்குப் போ” என்று கைகேயி சொல்லவில்லை. ராமனோடு புறப்படுவதற்குத் தயாராக நின்றான்.. அரண்மனைச் செல்வங்களை துறந்துவிட்டு மரவுரி தரித்து ராமனோடு புறப்பட்டான். உரையாசிரியர் எழுதுகின்றார். ‘‘நிலையற்ற செல்வங்களைத் துறந்தான். நிலைபெற்ற செல்வத்தை அடைந்தான். அதனால் அவன் ஸ்ரீமான் ஆனான்.

 

The post எந்தப் பதவியைக் கேட்க வேண்டும்? appeared first on Dinakaran.

Read Entire Article