எந்த திதியில் என்ன காரியங்கள் செய்யலாம்..?

2 months ago 17

நவக்கிரகங்களின் செயல்களுக்கு அன்றாட திதி, வார, நட்சத்திர, யோக, கரணம் ஆகிய ஐந்தும்தான் ஆதாரமாக உள்ளன. இதைத்தான் பஞ்சாங்கம் என்கிறோம். திதி என்ற வடமொழிச் சொல்லுக்கு தொலைவு என்று பொருள். குறிப்பாக திதி என்பது வானவெளியில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே ஏற்பட்ட தூரத்தின் பெயராகும். அமாவாசைக்குப் பிறகும் பவுர்ணமிக்கு பிறகும் திதிகள் ஒன்றுக்கு பின் ஒன்றாக வருகின்றன.

ஒவ்வொரு திதியும் ஒவ்வொரு சிறப்பை கொண்டுள்ளன. விநாயகர் சதுர்த்தி, ரிஷி பஞ்சமி, கந்த சஷ்டி, ரத சப்தமி, கோகுலாஷ்டமி, ராம நவமி, விஜய தசமி, வைகுண்ட ஏகாதசி, சிரவண துவாதசி, நாக சதுர்த்தசி, சித்ரா பவுர்ணமி, ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகியவைகள் திதிகளுடன் இணைந்த விசேஷ நாட்களாகும்.

வளர்பிறை காலத்தில் குறிப்பிட்ட திதியின் அதிதேவதையை வணங்கிவிட்டு சுப காரியங்களைச் செய்வது விசேஷமாகும். தேய் பிறை காலத்தில் சுபகாரியங்கள் செய்வதானால் பஞ்சமிக்குள் செய்வது உத்தமமாகும். தேய்பிறை பஞ்சமி வரையிலும் வளர்பிறை காலம் போல் பலன் உண்டு. என்ன திதியில் என்ன காரியங்கள் செய்யலாம்? என்பதை பார்ப்போம்.

பிரதமை: வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதமை தினம் வாஸ்து காரியங்கள் செய்வதற்கும், திருமணம் செய்வதற்கும் உகந்ததாகும். அக்னி சம்பந்தமான காரியங்களிலும் ஈடுபடலாம். மதச் சடங்குகளை மேற்கொள்ளலாம். இந்த திதிக்கு அதிதேவதை அக்னி.

துவிதியை: அரசு காரியங்கள் ஆரம்பிக்கலாம். திருமணம் செய்யலாம். ஆடை, அணிகலன்கள் அணியலாம். விரதம் இருக்கலாம். தேவதை பிரதிஷ்டை செய்யலாம். கட்டிட அடிக்கல் நாட்டலாம். ஸ்திரமான காரியங்களில் ஈடுபடலாம். இந்த திதிக்கு அதிதேவதை பிரம்மன்.

திருதியை: குழந்தைக்கு முதன்முதல் அன்னம் ஊட்டலாம். சங்கீதம் கற்க ஆரம்பிக்கலாம். சீமந்தம் செய்யலாம். சிற்ப காரியங்களில் ஈடுபடலாம். சகல சுப காரியங்களுக்கும் உகந்த திதி இது. அழகுக் கலையில் ஈடுபடலாம். இதன் அதிதேவதை கவுரி (பராசக்தி).

சதுர்த்தி: முற்கால மன்னர்கள் படையெடுப்புக்கு உகந்த நாளாக இதைத் தேர்ந்தெடுப்பார்கள். எதிரிகளை வெல்ல, விஷ சாஸ்திரம், அக்னி பயன்பாடு (நெருப்பு சம்பந்தமான காரியங்களை) செய்ய உகந்த திதி இது. எமதருமனும் விநாயகரும் இந்தத் திதிக்கு அதிதேவதை ஆவார்கள். ஜாதகத்தில் கேது தோஷம் உள்ளவர்கள், இந்தத் திதி நாளில் (சங்கடஹர சதுர்த்தி) விநாயகரை வழிபடுவதன் மூலம் கேது தோஷம் விலகும்.

பஞ்சமி: எல்லா சுப காரியங்களையும் செய்யலாம். இது விசேஷமான திதி ஆகும். குறிப்பாக சீமந்தம் செய்ய உகந்த திதி. மருந்து உட்கொள்ளலாம். ஆபரேஷன் செய்து கொள்ளலாம். விஷ பயம் நீங்கும். இந்த திதிக்கு நாக தேவதைகள் அதிதேவதை ஆவார்கள். எனவே நாக வழிபாட்டுக்கு உகந்த திதி இது. நாக தோஷம் உள்ளவர்கள் இந்தத் திதியில் நாக பிரதிஷ்டை செய்து வேண்டி வழிபட நாக தோஷம் விலகும். நாக பஞ்சமி விசேஷமானது.

சஷ்டி: சிற்ப, வாஸ்து காரியங்களில் ஈடுபடலாம். ஆபரணம் தயாரிக்கலாம். வாகனம் வாங்கலாம். புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளலாம். கேளிக்கைகளில் ஈடுபடலாம். புதிய பதவிகளை ஏற்றுக் கொள்ளலாம். இந்த திதிக்கு அதிதேவதை கார்த்திகேயன் ஆவார். சஷ்டி விரதம் இருந்து முருகனை வேண்டிக் கொள்பவர்களுக்கு சகல நலன்களும் உண்டாகும். சத்புத்திர பாக்கியம் கிட்டும்.

சப்தமி: பயணம் மேற்கொள்ள உகந்த திதி இது. வாகனம் வாங்கலாம். வீடு, தொழிலில் இடமாற்றம் செய்து கொள்ளலாம். திருமணம் செய்து கொள்ளலாம். சங்கீத வாத்தியங்கள் வாங்கலாம். ஆடை, அணிகலன்கள் தயாரிக்கலாம். இதன் அதிதேவதை சூரியன். இந்த தினத்தில், ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்துடன் உள்ள சூரியனை வழிபடுவது சிறப்பாகும்.

அஷ்டமி: பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். தளவாடம் வாங்கலாம். நடனம் பயிலலாம். ஐந்து முகம் கொண்ட சிவன் (ருத்ரன்) இதற்கு அதிதேவதை ஆவார்.

நவமி: சத்ரு பயம் நீக்கும் திதி இது. கெட்ட விஷயங்களை அழிப்பதற்கான செயல்களை இந்நாளில் தொடங்கலாம். இந்த திதிக்கு அம்பிகை அதிதேவதை ஆவாள்.

தசமி: எல்லா சுப காரியங்களிலும் ஈடுபடலாம். மதச் சடங்குகளைச் செய்யலாம். ஆன்மிகப்பணிகளுக்கு உகந்த நாள். பயணம் மேற்கொள்ளலாம். கிரகப்பிரவேசம் செய்யலாம். வாகனம் ஓட்ட பழகலாம். அரசு காரியங்களில் ஈடுபடலாம். இந்தத் திதிக்கு எமதருமனே அதிதேவதை.

ஏகாதசி: விரதம் இருக்கலாம். திருமணம் செய்யலாம். சிற்ப காரியம், தெய்வ காரியங்களில் ஈடுபடலாம். இதற்கு, ருத்ரன் அதிதேவதை ஆவார்.

துவாதசி: மதச்சடங்குகளில் ஈடுபடலாம். அதிதேவதை விஷ்ணு ஆவார்.

திரயோதசி: சிவ வழிபாடு செய்வது விசேஷம். பயணம் மேற்கொள்ளலாம். புத்தாடை அணியலாம். எதிர்ப்புகள் விலகும். தெய்வ காரியங்களில் ஈடுபடலாம். புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளலாம். கேளிக்கைகளில் ஈடுபடலாம்.

சதுர்த்தசி: ஆயுதங்கள் உருவாக்கவும், மந்திரம் பயில்வதற்கும் உகந்த நாள் இது. இந்த திதிக்கு அதிதேவதை காளி.

பவுர்ணமி: ஹோம, சிற்ப, மங்கல காரியங்களில் ஈடுபடலாம். விரதம் மேற்கொள்ளலாம். இந்த நாளுக்கு பராசக்தி அதிதேவதை ஆவாள்.

அமாவாசை: பித்ருக்களுக்கு ஆற்றவேண்டிய கடமைகளை, வழிபாடுகளை செய்யலாம். தான- தர்ம காரியங்களுக்கு உகந்த நாள். எந்திரப்பணிகள் மேற்கொள்ளலாம். சிவன், சக்தி அதிதேவதை ஆவார்கள்.

Read Entire Article