சென்னை: எந்த ஆதிக்கத்தையும் வெல்லும் ஆற்றல், மொழிக்கும் கலைக்கும் உண்டு என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில் நேற்று நடைபெற்ற முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா ஆண்டு இசைவிழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்த ஆண்டு கலைஞர் விருது முதன் முதலாக இந்த அமைப்பின் சார்பில் புரட்சித் தமிழன் சத்யராஜ்க்கு வழங்கப்படுகிறது. அதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. கலைஞரின் கனல் தெறிக்கும் வசனங்களைப் பேசி நடித்தவர். தந்தை பெரியாராகவே வாழ்ந்து காட்டியவர். எனவே, அவருக்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது.
ராஜரத்னா விருதைத் திருப்பாம்புரம் டி.கே.எஸ்.மீனாட்சி சுந்தரம் பெற்றுள்ளார். திருப்பாம்புரம் இசைக் குடும்பத்தைச் சேர்ந்த அவர், தலைவர் கலைஞர் கையால் கலைமாமணி விருது பெற்றவர். அவருக்குத்தான், ராஜரத்னா விருதை வழங்கி இருக்கிறேன்.இசையுலகத்தில் முடிசூடா மன்னராக – ஒரு சக்கரவர்த்தியாக திகழ்ந்தவர் ராஜரத்தினம். அவரைப் பற்றிச் செம்மங்குடி சீனிவாசய்யர் சொன்னதை இங்கு நான் குறிப்பிட விரும்புகிறேன். ‘‘நாதஸ்வர வித்வான்களில் திருவாவடுதுறை ராஜரத்தினம் ஒரு பெரிய மேதாவி.
காதில் கடுக்கன் மின்ன, கிராப்புத் தலையோடு அவர் வாசிக்கும் அழகே தனி அழகு. அவருக்கு முன்பெல்லாம், நாதஸ்வரம் என்பது ஒன்றரை முழம்தான் இருக்கும். முதன்முதலில் ராஜரத்தினம் தான் நாதஸ்வரத்தை நீளமாகச் செய்து வாசிக்க ஆரம்பித்த பெருமைக்கு உரியவர்’ என்று செம்மங்குடி சீனிவாசய்யர் பெருமையோடு சொல்லியிருக்கிறார். அத்தகைய ராஜரத்தினம் பெயரில் ராஜரத்னா விருது வழங்க வேண்டும் என்று முதன்முதலில் உத்தரவிட்டவர் தலைவர் கலைஞர்தான்
இயல் செல்வம் விருதை ஆண்டாள் பிரியதர்ஷினி பெற்றிருக்கிறார். கவிஞர் – சிறுகதையாசிரியர் – புதின எழுத்தாளர் – கட்டுரையாளர் – பேச்சாளர் – மொழிபெயர்ப்பாளர் என்று பன்முக ஆற்றல் கொண்டவர். இசைச் செல்வம் விருதை முனைவர் காயத்ரி கிரீஷ் பெற்றிருக்கிறார். சுமார் 38 ஆண்டுகளாக இசை நிகழ்ச்சிகள் நடத்தி வரும் காயத்ரி கிரீஷ், இசையில் அனைத்துத் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்திய சிறப்புக்குரியவர். நாதஸ்வரச் செல்வம் விருதைத் திருக்கடையூர் டி.எஸ்.எம்.உமாசங்கர் பெற்றிருக்கிறார்.
கடந்த 20 ஆண்டுகளாக, நாதஸ்வர இசையுலகத்தில் வலம் வரும் உமாசங்கர், தன்னைப்போலவே பல திறமைசாலிகளை உருவாக்கிக் கொண்டு வருகிறார். தவில் செல்வம் விருதை சுவாமிமலை சி.குருநாதன் பெற்றிருக்கிறார். ஹரித்துவாரமங்கலம் பழனிவேல், பெரும்பள்ளம் பி.பி.வெங்கடேசன் ஆகியோரிடம் தவில் பயின்று, இன்றைக்கு உலகம் முழுவதும் பயணித்துக் கொண்டு வருகிறார்.
கிராமியக்கலைச் செல்வம் விருதை தி.சோமசுந்தரம் பெற்றிருக்கிறார்.
தமிழ்நாடு கிராமியக் கலைகள் வளர்ச்சி மையத்தின் இயக்குநர் செயலாளரான சோமசுந்தரம், கரகாட்டத்தின் வரலாற்றை ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர். நாட்டியச் செல்வம் விருதை பார்வதி ரவி கண்டசாலா பெற்றிருக்கிறார். நாட்டிய உலகத்தில் தனக்கெனத் தனிப் பாணி மூலமாகத் தனிச்சிறப்பான இடத்தைப் பெற்றவர் பார்வதி. முத்தமிழ்ப் பேரவை வழங்கும் இந்த விருதானது, கலைஞரே வழங்கும் விருது போன்றது. உங்கள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகள், வாழ்த்துகள்.
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது நம்முடைய முழக்கம். அந்த வரிசையில் இசையிலும் தமிழ் ஒலிக்க வேண்டும், செழிக்க வேண்டும். இடையில் சாதி, மதம் என்று அந்நிய மொழிகள் மூலமாகப் பல்வேறு பண்பாட்டுத் தாக்குதல் நடந்தாலும், அனைத்தையும் தாங்கி, தமிழும் – தமிழினமும் – தமிழ்நாடும் நின்று நிலைக்கத் தமிழின் வலிமையும், நம்முடைய பண்பாட்டின் சிறப்பும்தான் காரணம். எந்த ஆதிக்கத்தையும் வெல்லும் ஆற்றல், மொழிக்கும் கலைக்கும் உண்டு. அந்த இரண்டையும் கண் போல காக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
The post எந்த ஆதிக்கத்தையும் வெல்லும் ஆற்றல் மொழிக்கும் கலைக்கும் உண்டு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.