இந்தியாவில், பாதுகாப்புத் துறை, ரயில்வே ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அதிகமான நிலங்களைக் கொண்டிருப்பது வக்பு வாரியம்தான் என சொல்லப்படுகிறது. வக்பு சொத்துக்களைக் கண்காணிப்பது அரசின் கடமை என்று கருதி, 1954ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் வக்பு சட்டம் இயற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் வக்பு வாரியங்கள் 1958ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டன. 1954ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அந்தச் சட்டம், 1995ம் ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்டு, முழுமைப்படுத்தப்பட்டு, அந்தச் சட்ட விதிகளின் அடிப்படையில் நிர்வகிக்கப்படுகின்றன. வக்பு சட்டம்- 1995 என்று அது குறிப்பிடப்படுகிறது.
இந்நிலையில், வக்பு வாரியத்தின் நிர்வாக செயல்திறனை மேம்படுத்துவதாக கூறி ‘வக்பு (திருத்தம்) மசோதா, 2024’ என்று பெயரிலான மசோதாவை, ஒன்றிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் தாக்கல் செய்தார். அதன்படி, வக்பு கவுன்சிலிலும், மாநில அளவிலான வக்பு வாரியத்திலும் முஸ்லிம் அல்லாத இரண்டு பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்ற புதிய விதிமுறை கொண்டு வரப்படுகிறது. வக்பு சட்டம் தொடர்பான பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
மாவட்ட ஆட்சியர் முஸ்லிமாக இல்லையென்றாலும், வக்பு வாரியத்தின் சொத்து விவகாரங்களில் இறுதி முடிவுகளை அவரால் எடுக்க முடியும் என்பது போன்ற சுமார் 40 திருத்தங்கள் இந்த மசோதாவில் கொண்டு வரப்பட்டுள்ளன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வக்பு சொத்துக்களை கண்காணிக்க 2009ம் ஆண்டு வம்சி (VAMSI) என்ற போர்ட்டலை உருவாக்கியது. கடந்த 2024 வரை நாடு முழுவதும் 8,72,324 அசையா சொத்துகளும்,16,713 அசையும் சொத்துகளும் வக்பு சொத்துகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் 97% சொத்துகள் 15 மாநிலங்களில் உள்ளன. உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 2,32,457 சொத்துகள் மதிப்பிடப்பட்டுள்ளது. இவை முறையாக ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள வக்பு வாரியங்களின் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. இந்நிலையில்தான் இவற்றை பாதுகாக்கிறோம் எனக்கூறிக் கொண்டு ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் புதிய நாடகத்தை அரங்கேற்றியது.
இஸ்லாமிய அமைப்புகளுடன் விவாதிக்காமல் தயாரிக்கப்பட்டுள்ள இந்த மசோதாவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. முஸ்லிம்களிடமிருந்து வக்பு வாரிய சொத்துக்களை அபகரிப்பதற்கான, சட்டத் திருத்தங்களை பாஜ கொண்டு வருகிறது என்று இஸ்லாமிய அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் குற்றம் சாட்டுவதில் நியாயம் இல்லாமல் இல்லை. ஒன்றிய அரசு மேம்போக்காக இவற்றை மறுத்திருந்தாலும் பசுத்தோல் போர்த்திய அவர்களின் குணம் உலகறிந்த ஒன்று. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு மாநில முதல்வர்களும், எதிர்க்கட்சிகளும் இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நாட்டிலேயே முன்னோடியாக தமிழக சட்டமன்றத்தில் இந்த மசோதாவிற்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போதே எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் கூட்டுக்குழுவிற்கு அனுப்பப்பட்டு, ஆளுங்கட்சியினரும் அவர்களது ஆதரவாளர்களும் கொண்டு வந்த திருத்தங்கள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் தற்போதைய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இம்மசோதாவை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்திருப்பது அதன் எதேச்சதிகாரத்தை காட்டுகிறது. ஆங்கிலேயர்களின் அடிவருடியாக செயல்பட்டவர்கள் மீண்டும் அதே கலாச்சாரத்தில் மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரமளித்திருப்பது அவர்களின் உண்மை முகத்தை உலகிற்கு காட்டியுள்ளது.
The post எதேச்சதிகாரம் appeared first on Dinakaran.