எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

3 months ago 10

புதுடெல்லி,

அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப், சட்டவிரோத குடியேறிகள் விவகாரத்தில் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக முறையான ஆவணங்கள் இன்றி நாட்டில் தங்கி உள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களை ராணுவ விமானங்கள் மூலம் அவரவர்களின் நாடுகளுக்கு அனுப்பி வைத்து வருகிறது டிரம்ப் நிர்வாகம்.

அந்த வகையில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை திருப்பி அனுப்பும் பணிகள் தொடங்கியதாகவும், முதல்கட்டமாக நேற்று முன்தினம் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து 205 இந்தியர்களுடன் 'சி-17' ரக ராணுவ விமானம் இந்தியாவுக்கு புறப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த சூழலில் இந்தியர்களுடன் புறப்பட்ட அமெரிக்க ராணுவத்தின் 'சி-17' ரக விமானம் நேற்று பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஸ்ரீ குரு ராம்தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதையொட்டி விமான நிலையத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விமானத்தில் வந்த இந்தியர்களை பஞ்சாப் மாநில அதிகாரிகள் வரவேற்றனர்.இதனிடையே 205 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், அமிர்தசரஸ் வந்தடைந்த அமெரிக்க ராணுவ விமானத்தில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 104 இந்தியர்கள் வந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்கள் கைவிலங்கு போடப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்தது.

இது குறித்து ஊடக மற்றும் விளம்பரத் துறைத் தலைவர் பவன் கேரா தனது எக்ஸ் தளத்தில், "அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள் கைவிலங்கிடப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட படங்களை பார்ப்பது ஒரு இந்தியராக எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. 2013 டிசம்பரில், இந்திய தூதர் தேவயானி கோப்ரகடே அமெரிக்காவில் கைவிலங்கிடப்பட்டு ஆடைகளை அவிழ்த்து சோதனை செய்யப்பட்டதை நான் நினைவில் கொள்கிறேன்.

இது தொடர்பாக அப்போதைய வெளியுறவு செயலாளர் சுஜாதா சிங் அமெரிக்க தூதர் நான்சி பவலுடன் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார். அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்காவின் நடவடிக்கையை இழிவானது என சாடினார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் அமெரிக்க அரசுக்கு கடும் எதிர்வினையாற்றியது. மீரா குமார், சுஷில் குமார் ஷிண்டே மற்றும் ராகுல் காந்தி போன்ற தலைவர்கள் அந்த நேரத்தில் இந்தியாவுக்கு வருகை தந்திருந்த அமெரிக்க நாடாளுமன்ற குழுவை (ஜார்ஜ் ஹோல்டிங், பீட் ஓல்சன், டேவிட் ஷ்வீகெர்ட், ராப் வுடலண்ட் மேடலின் போர்டல்லோ) சந்திக்க மறுத்துவிட்டனர்" என்று அதில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்து வந்ததாக கூறப்படும் இந்தியர்களை நாடு கடத்துவது குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற மக்களவையில் இன்று கோரிக்கை விடுத்தனர். மேலும் அமெரிக்காவில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்தியர்களுக்கு கை விலங்கு போடப்பட்டிருந்ததாக எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். மாநிலங்களவையிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக, நாடாளுமன்ற இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

Read Entire Article