
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (10.5.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் முதல் முறையாக ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு ஹஜ் மானியமாக 5,650 பயனாளிகளுக்கு தலா ரூ.25,000/- வீதம் மானியத் தொகை வழங்கிடும் அடையாளமாக, 10 பயனாளிகளுக்கு ஹஜ் மானியத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.
2024-25-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், முதல்-அமைச்சர் அவர்களின் அறிவுரைக்கிணங்க, முதல் முறையாக ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் தகுதி வாய்ந்த ஹஜ் பயணிகள் ஒவ்வொருவருக்கும் ஹஜ் மானியத் தொகை இந்த ஆண்டு முதல் 25,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு தமிழ்நாடு அரசால், 14 கோடியே 12 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தகுதியுள்ள பயணி ஒருவருக்கு ரூ.25,000 வீதம் 5,650 பயனாளிகளுக்கு இம்மானியத் தொகை வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக, 10 பயனாளிகளுக்கு முதல்-அமைச்சர் இன்று தலா ரூ.25,000 க்கான காசோலைகளை ஹஜ் மானியத் தொகையாக வழங்கினார். என தெரிவிக்கப்பட்டுள்ளது .