தஞ்சை: எதிர்க்கட்சிகள் கூட்டணி வைத்தாலும், தனி தனியாக நின்றாலும் வெல்லப்போவது திமுக தான் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கூறினார். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் எம்எல்ஏ அலுவலகத்தில் இன்று அவர் அளித்த பேட்டி: தமிழக பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு தான் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் திமுக தான் வெற்றி பெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் கூட்டணி வைத்தாலும், தனி தனியாக நின்றாலும் வெல்லப்போவது திமுக தான். பாஜ, அதிமுக, நாம் தமிழர் கட்சி ஆகியோருடன் சேர்ந்து புதிதாக வந்துள்ள நடிகர் விஜயும் எங்களுக்கு எதிரி திமுக என சொல்கிறார். எதிரிகளில் இரண்டாமிடம், மூன்றாமிடம் யார் என்பது தான் 2026 தேர்தலுக்கான கள நிலவரம். என்றைக்கும் தமிழகத்தில் முதலிடம் திமுகவும், அதன் தலைவர் முதல்வரும் தான். சட்டப்பேரவையில் அறிவித்த 10 கல்லூரிகள், பண்ருட்டியில் முதல்வர் அறிவித்த ஒரு கல்லூரி என மொத்தம் 11 கல்லூரிகளில் இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கான அனைத்து முயற்சிகளும் எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
The post எதிர்க்கட்சிகள் எப்படி வந்தாலும் வெல்லப் போவது திமுகதான்: அமைச்சர் கோவி.செழியன் திட்டவட்டம் appeared first on Dinakaran.