புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டசபைகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான, ஒரே நாடு ஒரே தேர்தல் திருத்த மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் அரசியல் சாசனம் பற்றிய 2 நாள் விவாதத்தின் முடிவாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று பேசினார். அவர் பேசும்போது, அம்பேத்கரை பற்றி சர்ச்சையாக பேசினார் என கூறப்படுகிறது.
இந்நிலையில், நாடாளுமன்ற இரு அவைகளும் இன்று காலை கூடியபோது, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அம்பேத்கரை பற்றி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சர்ச்சையாக பேசினார் என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை தெரிவித்து தொடர்ந்து அவையில் அமளியில் ஈடுபட்டனர். இதேபோன்று நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி, அக்கட்சியின் தலைவர் கார்கே, தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அம்பேத்கரின் புகைப்படங்களை கைகளில் ஏந்தியபடி கோஷம் எழுப்பினர்.
இதற்கு உடனடியாக அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜெய் பீம், ஜெய் பீம் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர். அமித்ஷா தன்னுடைய பேச்சின்போது, அம்பேத்கரை புண்படுத்தி விட்டார் என எம்.பி.க்கள் கூறினர். அம்பேத்கரின் பெயருக்கு பதிலாக கடவுள் பெயரை கூறலாம் என அமித்ஷா பேசினார் என்று குற்றச்சாட்டு கூறப்பட்டது. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.