டெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி மக்களவையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிராக சட்ட போராட்டம் நடத்தப்படும் என்று முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் அறிவித்துள்ளது. வக்பு வாரிய சொத்துக்களை நிர்வகிப்பதற்காக கடந்த 1995ம் ஆண்டில் வக்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் பல்வேறு திருத்தங்கள் செய்து வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை ஒன்றிய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் மக்களவையில் தாக்கல் செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு உட்படுத்தி, அதன் பரிந்துரைப்படி மசோதாவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. வரும் 4ம் தேதியுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைவதால், இந்த மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்தது.
காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்த நிலையில், பாஜ தனக்கிருக்கும் பெரும்பான்மையை பயன்படுத்தி இந்த திருத்த மசோதாவை மக்களவையில் நேற்று தாக்கல் செய்தது. ஒன்றிய சிறுபான்மையினர் விவகார துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, மசோதாவை தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே இந்த மசோதா மீதான விவாதம் நடந்தது. காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய், விவாதத்தை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசுகையில், ‘இந்த மசோதா, அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பின் மீதான தாக்குதல். கூட்டாட்சி அமைப்பின் மீதான தாக்குதல். இந்த மசோதாவின் பிரிவு 3ன்படி, சிறுபான்மையினர் இப்போது தங்கள் மத அடையாளத்தை சான்றிதழ்களுடன் நிரூபிக்க கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
நாளை, மற்ற மதங்களை சேர்ந்தவர்களும் இதை செய்ய நிர்பந்திக்கப்படுவார்களா? இது அரசியலமைப்பின் 26வது பிரிவுக்கு எதிரானது. சிறுபான்மையினர் குறிவைக்கப்பட்டுள்ளார்கள். நாளை மற்றவர்கள் குறிவைக்கப்படலாம்’ என்றார். சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசுகையில், ‘வக்பு மசோதா பாஜவின் மதவாத அரசியலின் புதிய வடிவம். மகா கும்பமேளாவில் ஏற்பட்ட உயிர் பலிகள், இந்திய நிலப்பரப்பை ஆக்கிரமித்த சீனா போன்ற விவகாரங்களை மறைக்க இந்த மசோதாவை கொண்டு வந்துள்ளனர்’ என்றார். திமுக எம்பி ஆ.ராசா பேசுகையில், ‘நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் தெரிவித்த கருத்துகளும், கூட்டுக்குழுவின் ஆவணங்களில் சொல்லப்பட்டிருப்பவையும் ஒன்றாக இல்லை. ஒன்றாக இருப்பதை நிரூபித்தால் என்னுடைய எம்பி பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன்’ என்று காரசாரமாக பேசினார்.
ஐதராபாத் எம்பியான அசாதுதின் ஒவைசி பேசுகையில், ‘தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையர் சட்டங்களை ஏற்றுக் கொள்ளாமல் அதனை மகாத்மா காந்தி கிழித்து எறிந்தார். அதுபோலவே, நானும் இந்த சட்டத்தை கிழிக்கிறேன். கோயில்கள் மற்றும் மசூதிகளின் பெயரால் இந்த நாட்டில் பிரிவினையை உருவாக்க பாஜ விரும்புகிறது. இதை கண்டிக்கிறேன். 10 திருத்தங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்றார். விவாதத்தில் குறிக்கிட்டு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், ‘வாக்கு வங்கி அரசியலுக்காக, வக்பு மசோதா முஸ்லிம்களின் மத விஷயங்களிலும் அவர்கள் நன்கொடையாக வழங்கும் சொத்துக்களிலும் தலையிடுவதாக வதந்தி பரப்பப்படுகிறது. வக்பு கவுன்சிலில் முஸ்லிம் அல்லாதவர்கள் எந்த மத விஷயத்திலும் தலையிட மாட்டார்கள். நன்கொடையாக வழங்கப்படும் சொத்துக்களின் நிர்வாகத்தை மட்டுமே அவர்கள் உறுதி செய்வார்கள்’ என்றார்.
விவாதத்திற்கு பதிலளித்து ஒன்றிய சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசுகையில், ‘இந்த சட்டத்திற்கும் மதத்திற்கும் சம்மந்தமில்லை. இது வக்பு சொத்துக்களை நிர்வகிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டது. இன்று நாட்டில் 3வது அதிக சொத்து வைத்திருக்கும் அமைப்பு வக்பு வாரியம். ஆனால் 70 ஆண்டுகளாக வாக்கு வங்கி அரசியலுக்காக முஸ்லிம்கள் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் எந்த பலனும் பெறவில்லை. மிகப்பெரிய நிர்வாக குறைபாடுகள் இருந்துள்ளன. இவை திறமையாக நிர்வகிக்கப்பட்டிருந்தால், முஸ்லிம்கள் மட்டுமல்ல, முழு நாட்டின் செல்வமும் மாறியிருக்கும். இந்த மாற்றத்தை அடுத்த ஓராண்டில் நீங்கள் பார்ப்பீர்கள். இந்த மசோதாவை யார் ஆதரிக்கிறார்கள், யார் எதிர்க்கிறார்கள் என்பதை நாடு பல ஆண்டுகளாக நினைவில் வைத்திருக்கும்’ என்றார்.
நள்ளிரவு வரை விவாதம் நடந்த நிலையில் மசோதா மீதான வாக்கெடுப்பு நடந்தது. இதையடுத்து மசோதா நிறைவேறியதாக நள்ளிரவு 2 மணிக்கு அறிவிப்பு வெளியானது. இதனை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் கிடைத்தன. மக்களவையில் நிறைவேறிய நிலையில், மாநிலங்களவையில் இந்த சட்ட திருத்த மசோதா இனி தாக்கல் செய்யப்பட உள்ளது. மக்களவையில் தற்போதுள்ள 542 உறுப்பினர்களில் 293 உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது. பாஜ.க்கு மட்டும் 240 உறுப்பினர்கள் உள்ளனர். கூட்டணி கட்சிகளில் 53 பேர் உள்ளனர். மாநிலங்களவையிலும் பாஜ.வுக்கு பெரும்பான்மை கிடைக்கும். ஏனெனில் 98 பாஜ. உறுப்பினர்கள் உள்பட 123 பேர் பாஜ. கூட்டணியில் உள்ளனர். பெரும்பான்மைக்கு 119 போதும். ஏனென்றால் அவையின் தற்போதைய மொத்த எண்ணிக்கை 236 ஆகும்.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த மசோதாவுக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்த முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது. இது குறித்து வாரிய உறுப்பினர் முகமது அதீப் கூறுகையில், ‘எங்கள் சொத்துகளை அபகரித்து விடலாம் என்று நினைத்து இந்த காட்சியை தொடங்கி இருக்கிறார்கள். இதை ஏற்று கொள்ள முடியுமா? நாங்கள் தோற்கடிக்கப்பட்டோம் என்று நினைக்காதீர்கள். நாங்கள் போராட்டத்தில் தோற்று விட்டதாக கருத வேண்டாம். தற்போதுதான் தொடங்கி இருக்கிறோம். இந்த மசோதா இந்தியாவின் கட்டமைப்பையே ஆபத்தில் தள்ளுவதால், இது நாட்டை காப்பாற்றுவதற்கான போராட்டம். மசோதாவை எதிர்த்து நீதிமன்றத்துக்கு செல்வோம். இந்த சட்டத்தை திரும்ப பெறும் வரை ஓயமாட்டோம்’ என்றார்.
வக்பு வாரிய திருத்த மசோதா முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளை மீறும் இந்த மசோதாவை திட்டவட்டமாக நிராகரிப்பதாக கூறிய வாரிய துணைத்தலைவர் அலி மொசின், விவசாயிகளின் போராட்டத்தைப்போல வாரிய உறுப்பினர்களும் மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்துவார்கள் என்றார். மிகவும் இருண்ட நாள்: இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா கூறுகையில், ‘இங்கு வெறும் 50 வாக்கு வித்தியாசம் மட்டுமே உள்ளது, இந்த மசோதா எவ்வளவு பிரபலமற்றது, பொதுமக்களின் ஆணைக்கு எதிரானது என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். கட்சியின் கொறடா மற்றும் இரு கூட்டாளிகளால் மட்டுமே அவர்களால் இந்த மசோதாவை நிறைவேற்ற முடிந்தது. இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயகத்தில் இது மிகவும் இருண்ட நாள். அரசாங்கம் நியாயமற்ற மற்றும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான ஒரு மசோதாவைக் கொண்டு வந்துள்ளது’ என்றார்.
The post எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி மக்களவையில் நிறைவேற்றம்; வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்தப்படும்: முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.