சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவராக இந்திய மக்களின் குரலாக ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில் ஒலிப்பதை பார்த்து நாட்டு மக்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அவர் பொறுப்பேற்றது முதற்கொண்டு மக்களை பாதிக்கிற பல்வேறு பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்பி ஆளுங்கட்சியின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். கடந்த ஜூலை மாதத்தில் நீட் – யூஜி தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாகவும், நுழைவு தேர்வு விவகாரத்தில் ஒன்றிய அரசின் பொறுப்பற்ற செயலையும் கடுமையாக கண்டித்தார். இதனால் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் வீணடிக்கப்படுவதை ஆட்சியாளர்களுக்கு உணர்த்தினார்.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக வெறுப்பு அரசியலின் மூலம் நூற்றுக்கணக்கானவர்களை பலிகொண்டு வன்முறை பூமியாக மாற்றப்பட்ட மணிப்பூருக்கு கடந்த ஜூலை மாதம் 3வது முறையாக நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரை துடைத்து நம்பிக்கை ஏற்படுத்தினார். அதேபோல, வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேறாமல் தடுத்து நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைப்பதற்கு பெரும் துணையாக இருந்தார். நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவராக ராகுல்காந்தி 100 நாட்களில் சிறப்பாக பணியாற்றி, மோடி ஆட்சியில் நடைபெறும் ஜனநாயக விரோத, பாசிச, பிற்போக்கு நடவடிக்கைகளை முறியடித்து தொடர்ந்து வெற்றிகளை குவிக்க வேண்டுமென, தமிழக காங்கிரஸ் சார்பில் 100-வது நாளில் மனதார வாழ்த்துகிறேன்.
The post எதிர்க்கட்சி தலைவராக ராகுல்காந்தி பதவி ஏற்று 100வது நாள்: செல்வப்பெருந்தகை வாழ்த்து appeared first on Dinakaran.