எதிர் மனுதாரராக சேர்க்கக் கோரி சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதிக்கு எதிராக வழக்கு: மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

2 months ago 18

புதுடெல்லி: முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயை வழக்கின் எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்து உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தனது பணிக்காலத்தில் தொழிலாளர் நலச் சட்டம் தொடர்பான வழக்கு ஒன்றை தள்ளுபடி செய்திருந்தார். இந்த உத்தரவுக்கு எதிராகவும், இதுகுறித்து உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும், ரஞ்சன் கோகாயை எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவானது உச்ச நீதிமன்றத்தில் தற்போதைய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ‘இதுபோன்ற வழக்குகளை அப்போதைய தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் அமர்வில் தாக்கல் செய்து வெற்றி பெற முடியாது என்பதால், தற்போது இதுபோன்ற மனுவை தாக்கல் செய்துள்ளீர்களா?’ என்று மனுதாரிடம் தலைமை நீதிபதி கேள்வியெழுப்பினார்.

இதையடுத்து அதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ‘ஒரு வழக்கில் சட்டவிரோதம் என்ற அறிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை, சம்மந்தப்பட்ட அதே அறிக்கையை மட்டுமே அடிப்படையாக கொண்டு ரஞ்சன் கோகாய் தள்ளுபடி செய்துள்ளார். இந்த செயல்பாடுகள் என்பது அது சட்ட விரோதம் தானே? அவ்வாறு செய்ய எந்தவித முகாந்திரமும் கிடையாது’ என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ‘ஒரு நீதிபதியை எதிர்மனுதாரராக கொண்டு மனுவை தாக்கல் செய்ய இயலாது. அதற்கான எந்த சட்ட நடைமுறையும் கிடையாது என்பதை மனுதாரர் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும்போது, அதுதொடர்பாக இந்த நீதிமன்றத்தின் முன்னதாக பணியில் இருந்த நீதிபதியை குறைக்கூற முடியாது. இந்த விவகாரத்தில், முன்னாள் நீதிபதி ரஞ்சன் கோகாய் பெயரை நீக்கும் பட்சத்தில், வழக்கு தொடர்பான மனுவை உச்ச நீதிமன்றம் பரிசீலனை செய்யும்’ என்று தெரிவித்தார். இதையடுத்து அதனை ஏற்பதாக தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ‘இந்த வழக்கிலிருந்து நீதிபதி ரஞ்சன் கோகாய் பெயரை நீக்குவது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக மனு கொடுக்கிறேன்’ என்று தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

 

The post எதிர் மனுதாரராக சேர்க்கக் கோரி சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதிக்கு எதிராக வழக்கு: மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு appeared first on Dinakaran.

Read Entire Article