எண்ணூரில் உயிரிழந்த ராணுவ அதிகாரிக்கு ராணுவ மரியாதையுடன் இறுதி அஞ்சலி

3 months ago 18

திருவொற்றியூர்: எண்ணூரில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த இந்திய ராணுவ அதிகாரியின் உடலுக்கு நேற்று மாலை ராணுவ மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. சென்னை எண்ணூர், உலகநாதபுரம் 3வது தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (44). இவருக்கு மனைவி சிந்துமதி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இவர், கடந்த 24 வருடங்களாக இந்திய ராணுவத்தில் அதிகாரியாக வேலைபார்த்து வந்துள்ளார்.

இதற்கிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன் பணியில் இருந்த செந்தில்குமாருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சென்னை எண்ணூரில் உள்ள வீட்டுக்குத் திரும்பி வந்து, தொடர் மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டு வந்துள்ளார். பின்னர், பெங்களூரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் உயர்சிகிச்சை பெற்று வந்தார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ராணுவ அதிகாரி செந்தில்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து, நேற்று மாலை எண்ணூர், உலகநாதபுரத்தில் உள்ள செந்தில்குமாரின் வீட்டுக்கு உடல் கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அனைத்து தரப்பு மக்களும் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரது உடலுக்கு ராணுவ அதிகாரிகள் தேசியக்கொடியை போர்த்தி, மனைவி மற்றும் 3 மகள்களிடம் வழங்கப்பட்டது.

மேலும், உடல்நலக்குறைவால் உயிரிழந்த ராணுவ அதிகாரி செந்தில்குமாரின் உடலுக்கு ராணுவ மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அவரது உடலை ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களுடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, எண்ணூர், தாழங்குப்பம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு அனைத்து மக்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

The post எண்ணூரில் உயிரிழந்த ராணுவ அதிகாரிக்கு ராணுவ மரியாதையுடன் இறுதி அஞ்சலி appeared first on Dinakaran.

Read Entire Article