
சென்னை,
அ.தி.மு.க.வில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சரும், கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.ஏ.செங்கோட்டையன் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இருவரும் பெயரைக் குறிப்பிட்டு பேசுவதை தவிர்த்து வந்தனர்.
குறிப்பாக, கே.ஏ.செங்கோட்டையன் பொதுக்கூட்ட நிகழ்வுகளில் பேசும்போது, எடப்பாடி பழனிசாமி பெயரை குறிப்பிடுவதை தவிர்த்து வந்தார். சென்னையில் நேற்று இரவு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஏற்பாடு செய்திருந்த விருந்திலும் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்காமல் தவிர்த்தார்.
இதற்கிடையே, தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் பள்ளி கல்வித் துறை, உயர் கல்வித் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் தொடங்கியது. இந்த விவாதத்தில், முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சரான கே.ஏ.செங்கோட்டையன் அ.தி.மு.க. சார்பில் பங்கேற்று பேசினார். அப்போது, எடப்பாடியாரை வணங்கி பேச்சை தொடங்குவதாக தெரிவித்தார். திடீரென அவர் இவ்வாறு பேசியது, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மட்டுமல்லாது, ஆளுங்கட்சி (தி.மு.க.) மற்றும் பிற கட்சி எம்.எல்.ஏ.க்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பலர் இருவருக்கும் இடையே இருந்த மோதல் போக்கு முடிவுக்கு வந்துவிட்டதாக பேசிக்கொண்டனர்.