எடப்பாடி பழனிசாமியுடன் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை - எஸ்.பி.வேலுமணி விளக்கம்

2 hours ago 1

சென்னை,

திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரனை சந்தித்த நிகழ்வுக்கு அரசியல் சாயம் பூசுவது வருத்தமளிக்கிறது. எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். அவருடன் எனக்கு எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

நேற்று திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற கழகக் கள ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு எனது மகனின் திருமண அழைப்பிதழை, முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுக்கு வழங்கினேன்.

அதன்பிறகு எனது குடும்ப நண்பர் நயினார் நாகேந்திரனை நேரில் சந்தித்து எனது மகன் திருமண அழைப்பிதழை வழங்கினேன். அப்பொழுது, முன்னாள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர். சொந்த குடும்ப நிகழ்ச்சிக்காக, குடும்ப நண்பரை சந்தித்த நிகழ்வுக்கு, அரசியல் சாயம் பூசியிருப்பது வருத்தமளிக்கிறது.

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் வழியில், எதிர்க்கட்சித் தலைவர், கழகப் பொதுச்செயலாளர், எடப்பாடி பழனிசாமி கழகத்தை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். அவருடன் எனக்கு எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. இந்நிலையில் அண்ணன் எடப்பாடி பழனிசாமிக்கும் எனக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருப்பதாக கூறுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article