
காந்திநகர்,
காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த மே 7-ந்தேதி 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத உள்கட்டமைப்புகளை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது.
இந்த சூழலில், குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்த தொழிலதிபர் திபென் பார்மர்(வயது 40), தனது சமூக வலைதள பக்கத்தில் பஹல்காம் தாக்குதல் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பல்வேறு ஆதாரமற்ற கருத்துகளை அவர் பேசியுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய அந்த வீடியோ, காவல்துறையினரின் கவனத்திற்குச் சென்றது.
இதையடுத்து திபென் பார்மரை அதிரடியாக கைது செய்த போலீசார், அவர் மீது புதிய குற்றவியல் சட்டம் பிரிவு 197(1) (D)-ன் கீழ், இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் பாதுகாப்பை பாதிக்கும் வகையில் தவறான தகவல்களை வெளியிட்டதாக வழக்குப்பதிவு செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.