சென்னை,
தியாகி சங்கரலிங்கனார் நினைவு தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
சென்னை ராச்சியத்திற்கு தமிழ்நாடு எனப் பெயரிடவேண்டும்! பொதுவாழ்விலும், அரசாங்கத்திலும் தூய வாழ்க்கை நிலவவேண்டும். மக்களின் துன்பங்களைத் தீர்க்க அரசே முன்வரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 1956 ஜூலை 27 முதல் தொடங்கி 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த ஈகி! நமது ஐயா சங்கரலிங்கனாரின் நினைவுநாள் இன்று!
இங்கு நாடு தமிழ்நாடாக ஆகியிருக்கிறது; ஆனால் தமிழுக்கும், தமிழருக்கும் இது சுடுகாடாக மாறியிருக்கிறது! ஆட்சி மொழியாக, அதிகார மொழியாக, பேச்சு மொழியாக, வழிபாட்டு மொழியாக, வழக்காடு மொழியாக, பண்பாட்டு மொழியாக எவ்விடத்திலும் தமிழ் இல்லை! வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழ் இல்லை!
இந்நிலையை மாற்றி எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! என்ற நிலையை உருவாக்குவதுதான் நம் உயர்ந்த நோக்கமாக இருக்கவேண்டும். உணர்வுப்பூர்வமாக அப்பெருமகனின் நினைவைப் போற்றுகிற இந்நாளில், ஒவ்வொரு தமிழ்ப் பிள்ளையும் அதை நிறைவேற்றுவோம் என்ற உறுதியை ஏற்பதுதான் நாம் செலுத்துகிற உண்மையான புகழ்வணக்கமாக இருக்க முடியும்.
போற்றுதற்கும், வணக்கத்திற்கும் உரியப் பெருந்தகை நமது ஐயா ஈகி சங்கரலிங்கனாருக்குப் பெருமிதத்தோடு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.