ஊழல் வழக்கில் கைதான எம்.எல்.ஏ.வுக்கு 5 நாட்கள் போலீஸ் காவல்

4 hours ago 3

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில முதல்-மந்திரியாக பகவந்த் மான் செயல்பட்டு வருகிறார். இதனிடையே அம்மாநிலத்தின் மத்திய ஜலந்தர் தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ராமன் அரோரா. இவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதேபோல் ஜலந்தர் மாநகராட்சி திட்டக்குழு துணைத்தலைவர் சுக்தேவ் மீது லஞ்ச புகார்கள் இருந்தன.

ராமன் அரோராவின் அறிவுறுத்தலிலேயே சுக்தேவ் லஞ்சம் பெற்றுக்கொண்டு அதை பங்கிட்டுக்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. சமீபத்தில் 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் சுக்தேவ் கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ராமன் அரோரா வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஊழல், முறைகேடு தொடர்பாக பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சோதனையின் முடிவில் எம்.எல்.ஏ. ராமனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட ராமன் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு கோர்ட்டு அனுமதியளித்தது. இதையடுத்து, எம்.எல்.ஏ. ராமன் சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் நடத்தப்படும் விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article