ஊருக்கே ராஜாவான ராமர்

2 weeks ago 3

மத்தியப் பிரதேசத்தின் திகாம்கார்க் மாவட்டத்தில் உள்ள ஓர்ச்சாவில் ஒரு வித்தியாசமான ராமர்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் ராமருக்கு ராஜாபட்டமும் உண்டு! அது மட்டுமல்ல ஓர்ச்சாவின் நிரந்தர ராஜாவும் ராமர்தான். இந்த ராஜாவுக்கு விசித்திரமாகத் தினமும் இரவில் ‘கன் சல்யூட்’ (Gun Salute) நடைபெறுகிறது. ஆச்சரியமூட்டும் ராஜா கோயில் பற்றி நிறைய தகவல்கள் இருக்கின்றன வாருங்கள்…

பங்கே கோரி மீது பக்தி

முதலில் ஓர்ச்சா மன்னனின் கதைக்குச் செல்வோம். ஓர்ச்சாவின் அன்றைய ராஜா மதுகார்ஷர் ஜூதேவ் 1554 – 1592ம் ஆண்டுகளுக்கு இடையே ஆண்டவர்! இவருடைய மனைவி மற்றும் ராணியின் பெயர் கணேஷ் குன்வாரி. இவரை கமலாதேவி எனவும் அழைப்பர். ராஜா சிறந்த கிருஷ்ண பக்தர். கிருஷ்ணனை இந்த பகுதியில் ‘பங்கே கோரி’ என செல்லமாக அழைப்பர். ராணி சிறந்த ராமர் பக்தை. அத்துடன் ராமர் போல், ஒரு குழந்தை வேண்டும்! எனவும் வேண்டிவந்தார்! ஆனால் இந்த ஜோடிக்கு குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. ஒரு நாள் ராஜாவும் ராணியும், பங்கே பீகாரி கோயிலுக்கு தரிசனத்துக்கு வந்தனர். அப்போது கோயில் மூடியிருந்தது! தனது ராணி இடத்தில், “காத்திருந்து, திறந்ததும் பார்த்து விட்டுச் செல்லலாம்’’ என்றார், மன்னர். ராணியோ, “வேண்டாம்… அரண்மனைக்கு திரும்பி விடலாம்’’ என்றார்.

அப்போது அங்கு ஒரு பெரிய சங்ககீத குழு; பங்கே பீகாரியை தரிசிக்க வந்தது. கோயில் மூடியிருப்பதை பார்த்ததும், அந்த குழு, பாட்டுப் பாடி ஆட ஆரம்பித்தது! பாட்டும் நடனமும் அற்புதமாய் இருந்தது. அதனை பார்த்த ராஜாவும் ராணியும், அதனுடன் தங்களை இணைத்துக் கொண்டு மனம் ஒன்றிப் பாடி ஆட ஆரம்பித்தனர்! அவர்கள் ஆட்டத்தைப் பார்த்து ரசிக்க கிருஷ்ணனும் ராதையுமே, மேலே வானத்தில் தோன்றி ரசித்ததுடன், பூமாரி பொழிந்தனராம்!

இதனை பார்த்த ராஜா, ராணியிடம், “பார்த்தாயா… என்னுடைய பங்கே கோரி. எனக்கும் உனக்கும் காட்சியளித்துவிட்டார். நீயோ ராமரிடம் குழந்தை வேண்டுமென வேண்டிக் கொண்டே இருக்கிறாய்! அவர் காட்சியும் தரவில்லை. குழந்தையையும் தரவில்லை’’ என கேலிப்பாக கூறினார்! ராணி, அதை கேட்டு மனம் வருந்தினார்!

ராணியின் சபதம்

ஒரு நாள் ராஜா “நாம் மதுரா சென்று குழந்தை கண்ணனை தரிசித்துவிட்டு வரலாம் வா..’’ என ராணியை அழைத்தார். அதற்கு ராணி, ‘‘நீங்கள் மதுரா செல்லுங்கள். நான் ராமரிடம் நியாயம் கேட்க அயோத்தி செல்கிறேன்! அங்கு அமர்ந்து ராமர் குறித்து கடும் தவம்செய்து, அவர் ஆசி பெற்று குழந்தையுடன்தான் இங்கு திரும்புவேன்’’ எனக் கூறிவிட்டாள்! அடுத்து ராஜா, மதுரா சென்றார்! ராணியோ அயோத்திக்கு நடந்தே சென்றார்! ராணி, சில நாட்களுக்குப் பின், அயோத்தியை அடைந்து, லட்சுமண் கோட்டையில் தங்கி கடும் தவத்தில் ஈடுபட்டார். முதலில் பழங்களை மட்டும் சாப்பிட்டார். பிறகு இலைகளை மட்டும் சாப்பிட்டார்! அடுத்து, ஒன்றும் சாப்பிடாமலே தவம் செய்தார்! ராணி, அயோத்திக்கு கிளம்பும் முன், தனது விஸ்வாசிகளை அழைத்து, நான் ராமருடன்தான் வருவேன்.

அதற்கு அவருக்கு ஒரு கோயில் கட்டி வையுங்கள் எனக் கூறி விட்டுத்தான் புறப்பட்டார்! அவர்களும், ராணியின் கட்டளையை ஏற்று அடுத்த நாள் முதல் ஒரு புதிய கோயிலை எழுப்பினர்! சதுர்புஜ கோயிலில் இன்றும் கூட.. உள்ளே ராமர் கிடையாது! ஆனால், கட்டடக் கலைக்கு பேர் போன கோயில் சிவப்பு சலவைக் கல்லை பயன்படுத்தி, அவர்களில் ஏராளமான வேலைப்பாடுகளுடன் துரிதமாக தயாராக்கினர்!

குழந்தையாக வந்த ராமர்

இதனிடையே ராணியின் தவம் ஒரு மாதம் கடந்தும், ராமர் காட்சி தரவில்லை. மனம் வருந்திய ராணி, குழந்தை இல்லாமல் நான் ஓர்ச்சாவுக்கு திரும்ப மாட்டேன். எனக் கூறி சரயு நதியில் இறங்கி மூழ்கலானார்! அப்போது ஒரு ஆச்சர்யம் நிகழ்ந்தது! ராணியின் மடியில் ஒரு குழந்தை, அத்துடன் ராமர் பேசினார்!“உன் தவத்தை மெச்சினேன். வரம் கேள் தருகிறேன்’’ என்றார்.

“இந்த குழந்தையுடன் நான் ஓர்ச்சா செல்ல அனுமதி தரவேண்டும்’’ என்றாள் ராணி.
“உன்னுடன், வர மூன்று நிபந்தனைகள். அதனை நீ ஏற்றால் வருகிறேன்’’ என்றார் ராமர்.
‘‘அந்த மூன்று நிபந்தனைகள் என்ன?’’
– ராணி
‘‘என்னுடன் கூடவே நிறைய ரிஷிகளும் வருவார்கள்! ருக் நட்சத்திரம், துவங்கி முடியும் வரை நடக்கலாம்! பிறகு மீண்டும் எப்போது ருக் நட்சத்திரம் துவங்குகிறதோ, அப்போதுதான் புறப்படுவேன்’’
– ராமர்
‘‘சரி இரண்டாவது நிபந்தனை என்ன?’’

‘‘ஓர்ச்சா சென்றடைந்ததும், என்னை ராஜாவாக அறிவிக்க வேண்டும். அதாவது உன் கணவர் ராஜா இல்லை. நானே ஓர்ச்சாவுக்கு ராஜா’’ – ராமர். குழந்தை கிடைத்த மகிழ்ச்சியில்,
‘‘ராஜாவிடம் சொல்லி ஏற்பாடு செய்கிறேன்’’ என்றார் ராணி.
“மூன்றாவது நிபந்தனை என்ன? எனக் கேட்டாள்.

‘‘நான் எங்கு இருக்க வேண்டும் என எண்ணுகிறேனோ, அது வரை நீ என்னை மடியிலேயே வைத்திருக்க வேண்டும்!’’
– ராமர்.

‘‘சரி’’ என்றாள் ராணி! ராமர் மறைய, ராணி குழந்தையுடன் கரைக்கு வந்து நடந்ததை அனைவரிடமும் கூறினார்! ருக் நட்சத்திரம் ஆரம்பமானதும், மீண்டும் கால் நடையாகராணி, ஓர்ச்சாவுக்கு குழந்தையை மடியில் வைத்தபடியே புறப்பட்டார்! நிறுத்தி நிறுத்தி சென்றதால், ராணி ஓர்ச்சா வந்து சேர 8 மாதம் 27 நாட்களும் ஆயின (1574-1575ம் ஆண்டுகளில்) ராமர் ராஜா ராணி, அரண்மனைக்குள் தன் இடத்திற்குச் சென்று குழந்தையை அங்கு அமர்த்திவிட்டு உள்ளே சென்று சில வேலைகளை செய்துவிட்டு திரும்பியவருக்கு அதிர்ச்சி! அங்கு குழந்தையில்லை. சிலைதான்இருந்தது! இதனிடையே ராஜாவின் கனவில் பங்கே பீகாரி தோன்றி, ‘‘நானும் ராமனும் ஒன்று தானே? ஏன் அவனுடன் பகை எனக் கேட்டு, ராணியுடன் சமரசம் செய்து, ராணியை வரவேற்று அழைத்து வா’’ எனக் கூறி மறைந்துவிட்டார். ராஜாவும் அடுத்த நாள், ராணியை வரவேற்க படைகளுடன் எதிரில் போய் ராணியை குழந்தையுடன் ஊர்வலமாக அழைத்து வந்தார். ராணி அரண்மனை திரும்பியபின்தான் குழந்தை சிலையானது.

ராணி, முதலில் அதனை பார்த்து திகைத்து மூர்ச்சையானபோது, அன்றிரவே அவர் கனவில் ராமர்தோன்றி, “கவலைப் படாதே, இனி உன் மாளிகைதான் நான் இருக்கும் கோயில். நான் உன்னுடனே இருப்பேன்.’’ எனக்கூற, ராணி மகிழ்ந்தாள்! ராமர் கேட்டபடி, ராஜாவுடன் ராணி சிபாரிசு செய்து, ராமரை ஓர்ச்சாவின் ராஜாவாக அறிவித்தார்! அத்துடன் ராமர் இங்கு “ராமர் ராஜா’’ எனவும் அழைக்கப்பட்டார்! ராமருக்கு நிவேதனம்கூட ராஜா பாணி உணவு வகைதான்!

இனி கோயிலுக்குள் செல்வோமா…

ராணி பவனின் உள்ளே ராமர் ராஜாவின் கர்ப்பகிரகம் நிரந்தரமாகிவிட்டது! பிரம்மாண்ட வாசல். ராஜா, ராணியை பார்க்க எவ்வளவு கட்டுப்பாடு இருக்குேமா அவ்வளவு கட்டுப்பாடு ராமர் ராஜாவுக்கும் உண்டு. கோயில் சீக்கிரமே திறக்கப்பட்டாலும், தரிசனம், ஆரத்தி சமயத்தில்தான்! அதாவது காலை ஆரத்தி முதல் சாப்பாட்டு வேலை ஆரத்தி வரை; ராமர் ராஜாவை தரிசிக்கலாம்!

மாலையிலும் இதே போல், ஆரத்தி சமயத்தில் ஆரம்பித்து இரவு உணவு ஆரத்தியுடன் முடியும்! கோயில் மூடப்படும் முன் ராமர் ராஜாவுக்குத்தினமும் ‘கன் சல்யூட்’ (Gun Salute) உண்டு. ராமர் ராஜா கதை மட்டுமல்ல, கர்ப்பகிரகத்தில் உள்ள ராமரும் வித்தியாசமானவர்தான்! வலது கையில் வாலுடனும், இடது கையில் கேடயத்துடன் காட்சியளிக்கிறார்! தாமரை பத்மாசனத்தில் அமர்ந்து இடது காலை, வலது தொடையின் மீது குறுக்காக வைத்துள்ளார். ஒவ்வொரு நாளும் வழிபாட்டிற்குப் பிறகு இடது கால் விரலில் சந்தனம் பூசி வைக்கின்றனர்! இடது காலின் பெருவிரலை கூர்ந்து கவனித்து கண்டு பிடித்து வழிபட்டால், தரிசிப்பவரின் வேண்டுதல் பலிதமாகிவிடுமாம்! ஆனால், அது எளிதல்ல! ராமரின் வலது கையைக் கூர்ந்து கவனித்து பார்வையை இறக்கிக் கொண்டே வந்தால் தரிசித்துவிடலாம்! கோயில் அர்ச்சகர்களிடத்தில் கேட்டு தரிசிக்கலாம்!

கர்ப்பகிரகத்தில் ராமருடன் வலது புறம் லட்சுமணனும், இடதுபுறம் சீதையும் இருக்கிறார். சீதையின் காலடியில் அனுமானும், ஜாம்பவானும் உள்ளனர். இவர்களைத் தவிர, வலது பக்கத்தில் சுக்ரீவன் மற்றும் நரசிம்மரை தரிசிக்கலாம்! ராமர் ராஜாவுக்கு எப்போதும் ராஜா பாணி அலங்காரம்தான்! ஜம்மென்று இருக்கிறார். ஆரத்தி முடிந்ததும் காலை வேளையில், சில சமயம், பக்தர்களுக்கு இலவசமாக லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

பொதுவாக கோயில் காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 5 முதல் 10.30 மணி வரை திறந்திருக்கும்.ஸ்ரீராம நவமி, ஹோலிகா, ராமர்கல், யாணம், தீபாவளி இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. எப்படி செல்வது? சென்னையில் இருந்து விமானம் அல்லது ரயில் மூலமாக மத்திய பிரதேச மாநிலம் ஜான்சி என்னும் பகுதிக்கு வரவேண்டும். அங்கிருந்து 16 கி.மீ பயணித்தால், ஸ்ரீ ராம ராஜா கோயிலை அடைந்துவிடலாம்.

ராஜிராதா

The post ஊருக்கே ராஜாவான ராமர் appeared first on Dinakaran.

Read Entire Article