சென்னை: ஊரகப் பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் சிறந்து விளங்குவதற்காக அவர்களுக்கு பயிற்றுவிக்க ‘திறன் திட்டம்’ கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டம் முழுமையாக மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று தேர்வு முடிவுகளை வெளியிட்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டி: ஆங்கிலமும் தமிழும் நல்ல முறையில் பயிற்றுவிக்க வேண்டும் என்ற நிலையில் பள்ளிக்கல்வித்துறை இருக்கிறது. சிபிஎஸ்இ மாணவர்களை வெளியேற்றும் நிலை வந்தால் அவர்களை அரசுப்பள்ளிகளில் சேர்க்கவும் தயார் நிலையில் இருக்கிறோம். ஒரு கல்வி முறையில் இருக்கும் மாணவ, மாணவியரை பயமுறுத்தக் கூடாது. மாணவ, மாணவியர் புகார் தெரிவிக்க ஏற்கனவே இரண்டு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆலோசனையும் கூற அதிகாரிகள் அமர்த்தப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் நிலை குறித்து பார்க்கும் போது பெற்றோர் எப்போதும் ஒப்பீட்டு முறையை கடைபிடிக்கின்றனர். அது தவறான அணுகுமுறை. யாருடனும் உங்கள் குழந்தைகளை ஒப்பிடாதீர்கள். உங்கள் பிள்ளைகளுக்கு அழுத்தம் கொடுக்காதீர்கள். நான் முதல்வன் திட்டம் மூலம் உயர்கல்விக்கு செல்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. மதிப்பெண் பட்டியல் வாங்க வரும் போது கல்லூரிகளில் சேர்வதற்கான ஆலோசனை வழங்க உள்ளனர். அரசுப் பள்ளிகளை சேர்ந்த பிள்ளைகள் அதிக அளவில் கல்லூரிகளில் சேரும் சதவீதம் அதிகரித்துள்ளது. இன்னும் இது அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஆங்கிலத்தில் 100 மதிப்பெண்கள் 38 பேர் எடுத்துள்ளனர். அந்த மொழில் திறன் என்கிற திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் மூலம் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை இந்ததிட்டம் செயல்படுத்தப்படும்.
ஊரகப் பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு இந்த திட்டம் உதவியாக இருக்கும். அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் கல்லூரிகள் சேர்ந்தார்களா என்பது குறித்து கணகெடுப்பு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேராமல் இருப்பவர்களை கல்லூரிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 410 தேர்வு மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த ஆண்டு பள்ளிகளில் நலிந்த பிரிவு மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். இருப்பினும் ஒன்றிய அரசு நிதி வழங்காத நிலையில் ரூ.600 கோடி வரையில் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். அதற்கு ஒன்றிய அரசு நிதி வழங்க வேண்டும்.
The post ஊரக பகுதி மாணவர்கள் ஆங்கில மொழி கற்க ‘திறன் திட்டம்’: அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.