ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை, பொன்னேரி பகுதியில் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 1000 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமாகியுள்ளன. இதனால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஊத்துக்கோட்டை அருகே பேரண்டூர், பனப்பாக்கம், பாலவாக்கம் போன்ற பகுதிகளில் விவசாயிகள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் என 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.
இப்பகுதி விவசாயிகள் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் நெல் பயிர் சாகுபடி செய்துள்ளனர். ஒரு ஏக்கருக்கு ₹25 ஆயிரம் முதல் ₹30 ஆயிரம் வரை செலவு செய்துள்ளனர். இதை அறுவடை செய்ய இன்னும் ஒரு சில நாட்களே இருந்த நிலையில் நேற்று காலை திடீரென பெய்த கனமழையால் நெல் பயிர்கள் மழைநீரில் மூழ்கியது. அதுமட்டுமல்லாமல், இந்த நெல் பயிர்கள் 2 நாட்களுக்கு மேல் நீரில் மூழ்கி இருந்தால் பயிர்கள் மொத்தமும் அழுகி விடும். இதனால், தங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, வேளாண் துறை அதிகாரிகள் பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்குச் சென்று பாதிப்பை கணக்கெடுக்து, அரசு சார்பில் நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதேபோல் கடந்த வருடம் பெய்த வடகிழக்கு பருவமழை மற்றும் பெஞ்சல் புயல் காரணமாக கொட்டி தீர்த்த கனமழையால் பொன்னேரி பகுதியில் பல இடங்களில் விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டது. இதிலிருந்து மீண்டு, தற்போது விளை நிலங்களில் நெற்பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பொன்னேரி சுற்றுவட்டாரத்தில் திடீரென 7 செமீ கனமழை கொட்டி தீர்த்தது. பருவம் தவறி பெய்த கனமழையால் அரசூர், சிற்றரசூர், ஆவூர், பனப்பாக்கம், பெரிய கரும்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 500க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. இன்னும் 2 நாட்களில் தண்ணீரில் மூழ்கிய பயிர்கள் அழுகிவிடும். ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவிட்டு சாகுபடி செய்த நிலையில், பருவம் தவறி பெய்த மழையால் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்டுள்ள விளை நிலங்கள் குறித்து கணக்கெடுத்து உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் எனவும், பயிர்க் காப்பீடு பெற்றுத் தர வேளாண் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post ஊத்துக்கோட்டை, பொன்னேரியில் கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 1000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.