ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை ஆரணியாற்றின் குறுக்கே ரூ27 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம் விரிசல் ஏற்பட்டு சேதமானதையடுத்து அதனை உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஊத்துக்கோட்டை-திருவள்ளுர் நெடுஞ்சாலை, ஊத்துக்கோட்டையில் ஆரணியாற்றின் குறுக்கே ரூ27 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலப் பணிகள் கடந்த 2018 ஆகஸ்ட்-செப்டம்பர் மாதத்தில் தொடங்கி 2021ம் ஆண்டு முடிவடைந்தது. இந்த பாலத்தில் ஊத்துக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள தாராட்சி, பாலவாக்கம், பேரண்டூர், பனப்பாக்கம், சூளைமேனி பகுதிகளைச் சேர்ந்த மக்கள் திருவள்ளூர் செல்வதற்கும், அனந்தேரி, போந்தவாக்கம், பெரிஞ்சேரி, மேலக்கரமனூர், வடதில்லை, மாம்பாக்கம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஊத்துக்கோட்டை செல்வதற்கும் இந்த மேம்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
ஊத்துக்கோட்டை அருகில் உள்ள அனந்தேரி, மேலக்கரமனூர், பேரிட்டிவாக்கம் போன்ற கிராம மக்கள் பஸ் வசதி இல்லாததால் நடந்தும், சைக்கிள், பைக் போன்ற வாகனங்களிலும் ஊத்துக்கோட்டைக்கு வந்து செல்கிறார்கள். இந்தநிலையில் ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கும், தமிழகத்தில் இருந்து ஆந்திராவிற்கும் இந்த பாலத்தின் மீது அதிக கனரக வாகனங்கள் செல்வதால் பாலத்தின் இணைப்பில் அதிர்வு ஏற்பட்டு, பாலத்தில் விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனால் பாலம் பெரும் சேதம் அடைவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் சேதமடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post ஊத்துக்கோட்டை ஆரணியாற்றின் குறுக்கே ரூ27 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தில் விரிசல்: உடனே சீரமைக்க வேண்டுகோள் appeared first on Dinakaran.