ஊட்டியில் கடும் உறைபனி குறைந்தபட்ச வெப்பநிலை 2.5 டிகிரி செல்சியஸ்: குளிரால் மக்கள் அவதி

4 months ago 16

ஊட்டி: ஊட்டியில் நேற்று கடுமையான உறைபனியின் தாக்கம் காரணமாக குறைந்தபட்ச வெப்பநிலை 2.5 டிகிரி செல்சியசுக்கு சென்றது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் துவங்கி மார்ச் முதல் வாரம் வரை உறைபனி காலமாகும். ஆரம்பத்தில் நீர்பனி பொழிவுடன் துவங்கும். பின்னர் உறைபனிப்பொழிவு காணப்படும்.

இந்த சமயத்தில் மாவட்டத்தில் கடும் குளிர் நிலவும். புல் மைதானங்கள், தேயிலை தோட்டங்களில் உறைபனி கொட்டும். புல்வெளிகளில் கொட்டி கிடக்கும் பனியை பார்ப்பதற்கு வெள்ளை கம்பளம் விரித்ததுபோல் காணப்படும். இந்த உறைபனிப்பொழிவால் புற்கள், செடி கொடிகள், தேயிலை செடிகள் கருகி விடும். இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், பெஞ்சல் புயல் காரணமாக நவம்பரில் துவங்க வேண்டிய உறைபனி பொழிவு தள்ளிப்போனது. டிசம்பர் இறுதியில் இருந்து உறைபனிப்பொழிவு துவங்கிய நிலையில், காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு சில நாட்கள் பனிப்பொழிவு நிலவவில்லை.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக உறைபனிப்பொழிவின் தாக்கம் சற்று அதிகமாக உள்ளது. இதனால் கடும் குளிர் நிலவி வருவதால் அதிகாலை நேரங்களில் உள்ளூர் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனிடையே வானிலை ஆய்வு மையமும் நீலகிரி மாவட்டத்தில் பகலில் வறண்ட வானிலையும், இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் கடுமையான உறைபனிப்பொழிவு நிலவும் என தெரிவித்திருந்தது. இதற்கேற்ப நேற்று அதிகாலை வழக்கத்தைவிட உறைபனியின் தாக்கம் அதிகரித்த நிலையில் ஊட்டியில் அதிகபட்சமாக 11.9 டிகிரி செல்சியசும், குறைந்தப்பட்ச வெப்பநிலை 2.5 டிகிரி செல்சியசாகவும் பதிவாகியிருந்தது.

காந்தல் பகுதி, தலைகுந்தா, தாவரவியல் பூங்கா மைதானம், குதிரை பந்தய மைதானம் உள்ளிட்ட இடங்களில் உறைபனி கொட்டி கிடந்தது. உறைப்பனி காரணமாக தொழிலாளர்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய மாணவ, மாணவிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

உறைபனி போர்வையில் ‘இளவரசி’
கொடைக்கானலில் மீண்டும் உறைபனியின் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நட்சத்திர ஏரி, ஜிம்கானா நீர்ப்பிடிப்பு பகுதி, பாம்பார்புரம், கீழ்பூமி, பியர்சோலா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் உறைபனி நிலவியது. இதனால் புல்வெளி பரப்பெங்கும் வெண்ணிற போர்வை விரித்தது போல் காணப்படுகிறது. இந்த காட்சியை சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசிப்பதுடன், ஆர்வமுடன் புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்கின்றனர். உறைபனி காரணமாக கொடைக்கானல் மலைப்பகுதியில் கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் கம்பளி ஆடைகளை உடுத்தி கொண்டு உலவுகின்றனர். ஏராளமானோர் விடுதிகள், வீடுகளில் முடங்கியுள்ளனர்.

நெருப்பு மூட்டி குளிர் காய்ந்த வாலிபர் பலி
ஊட்டி அருகே இத்தலார் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (34). இவர் வீட்டில் தீ மூட்டி குளிர் காய்ந்துள்ளார். வீட்டில் இவரது மனைவி புவனா (28), மகள் தியாஸ்ரீ (4) மற்றும் உறவினர்கள் சாந்தா (59), ஈஸ்வரி (57) ஆகியோர் தங்கியிருந்தனர். புகைமூட்டத்தில் வீட்டில் அனைவரும் மயங்கினர். இவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் ஜெயப்பிரகாஷ் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. 4 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post ஊட்டியில் கடும் உறைபனி குறைந்தபட்ச வெப்பநிலை 2.5 டிகிரி செல்சியஸ்: குளிரால் மக்கள் அவதி appeared first on Dinakaran.

Read Entire Article